பயிர்களுக்கு பயன் தரும் நுண்ணுயிர் உரங்கள்: கோவை வேளாண்மைத் துறையினர் அறிவிப்பு


கோவை: பயிர்களுக்கு பயன் தரும் நுண்ணுயிர் உரங்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளண்மைத் துறையினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”உயிர் உரங்கள் தழைச்சத்தை கிரகித்து, வேர்முடிச்சில் பொருத்தியும், மணிச் சத்தைக் கரைத்தும் இயற்கை முறைகள் மூலம் பயிகளுக்கு கொடுக்கிறது. ரசாயன உரங்கள் பயன்பாட்டை உயிர் உரங்கள் குறைக்கிறது.

உயிர் உரங்களிலுள்ள நுண்ணுயிர்கள் மண் இயற்கை ஊட்டச்சத்து சுழற்சியை மீட்டு மண் கரிமபொருட்களை அதிகரிக்கிறது. ஒருங்கிணைந்த முறையில் பயிர் உற்பத்திக்கு நுண் உயிர்கள் உரங்கள் பயன்படுவதுடன், மண்ணின் வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது.

நுண் உயிர்களைப் பயன்படுத்துவதால் 30 சதவீதம் தழைச்சத்தும், 20 சதவீதம் மணிச்சத்தும் கிடைக்கிறது. இதனால் இடு பொருட்களின் செலவும் கணிசமாக குறைகிறது. மேலும், சில நுண் உயிர்கள் பயிர் வளர்ச்சிக்கு தேவையான இன்டோல் அசிடிக் அமிலம், ஜிப்ரலிக் அமிலம், கரிம அமிலம் ஆகியவற்றை உற்பத்தி செய்து பயிரின் இலைகள், தூர், வேரின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

ரைசோபியம் வகை பாக்டீரியா பயறு வகை, நிலக்கடலை பயிர்களுக்கு கொடுப்பதன் மூலம் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து வேர்முடிச்சில் தக்கவைத்து 20 சதவீதம் மகசூலை அதிகரிப்பதுடன், முடிச்சுகளில் சுரக்கும் திரவம் மண்ணை வளப்படுத்துகிறது.

அசோஸ்பைரில்லம் பாக்டீரியா காற்றிலுள்ள தழைச்சத்தை ஈர்த்து நிலைநிறுத்தி 'இணைக்கூட்டு வாழ்' முறையில் நெற்பயிரின் வேர் மற்றும் வேர் சூழ் மண்டலத்தில் செயல்படுகிறது. பயிரோடு சேர்ந்து தழைச்சத்தை நிலைநிறுத்தும் தன்மை கொண்டது. நெற்பயிர் ஒளிச்சேர்க்கை மூலம் உற்பத்தி செய்யும் மாவுச் சத்தினை அசோஸ்பைரில்லம் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாகக் காற்றிலுள்ள தழைச்சத்தை பிடித்து நெற்பயிருக்குக் கொடுக்கிறது.

பாஸ்போ பாக்டீரியா இடுவதன் மூலம், மலர்களின் எண்ணிக்கையும், விதை பெருக்கத்தையும் அதிகரிக்கின்றது. அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் போன்ற தழைச்சத்து அளிக்க கூடிய உயிர் உரங்களுடன் பாஸ்போ பாக்டீரியாவை கலந்து இடும்போது தழைச்சத்தினை அதிக அளவில் ஈர்க்கும் பணியில் பயிர்களுக்கு உதவி புரிகின்றன.

வேம் என்பது பயிர்களுக்கு தேவையான மணிச்சத்து, கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்பு சத்தை மண்ணிலிருந்து கிரகித்து பயிர்களுக்கு கொடுக்கும் வேர் உட்பூசனமாகும். நுண்ணுயிர் உரங்களுக்கு , ரைசோபியம், பாஸ்போபாக்டீரியாவும், ஊட்ட சத்துமிக்க சிறுதானிய பயிருக்கு, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியாவும் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.