போதிய மழையின்மை, வெயில் தாக்கம்: சேலத்தில் மா விளைச்சல் கடும் சரிவு


மேட்டூரை அடுத்த வனவாசி பகுதியில் உள்ள மாந்தோப்பில், தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்க மாம்பழங்களை பறிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி.

மேட்டூர்: போதிய மழை இல்லாததாலும், கடும் வெயில் தாக்கத்தாலும் சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் மா விளைச்சல் 90 சதவீதம் வரை சரிந்துள்ளது, என வியாபாரிகள் தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டாபுரம், மகுடஞ் சாவடி, சங்ககிரி சுற்றுப்புற பகுதியில் 2 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாமரங்கள் உள்ளன. இங்கு செந்தூரா, பெங்களூரா, அல்போன்சா, கிளிமூக்கு, மல்கோவா, பங்கனப்பள்ளி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன.

இங்கு அறுவடை செய்யப்படும் பழங்கள் உள்ளூர் மார்க்கெட் தவிர மாங்கூழ் தொழிற்சாலைகளுக்காக கிருஷ்ணகிரிக்கும், விற்பனைக்காக சேலம், பெங்களூருவுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மாமரங்களில் காய் பிடிக்கும் நேரத்தில் பெய்த தொடர் மழை மற்றும் நோய் தாக்குதல் உள்ளிட்டவற்றால் மா விளைச்சல் பாதிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக மழையால் இழப்பை சந்தித்த மா விவசாயிகள் நடப்பாண்டு கடும் வெயிலால் இழப்பை சந்தித்துள்ளனர்.

நடப்பாண்டில் மாமரத்தில் பூ பூத்த நிலையில், போதிய மழை இல்லாததாலும், கடும் வெயில் தாக்கத்தாலும் பூக்கள் உதிர்ந்து வீணாகின. நடப்பாண்டில் மா விளைச்சல் சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர்.

இதுகுறித்து வனவாசியைச் சேர்ந்த விவசாயியும், வியாபாரியுமான ஹரிராமன் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக மா விளைச்சல் பெரும் நஷ்டத்தில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் பருவமழை பொய்த்துப் போனதாலும், கடும் வெயில் தாக்கம், பூச்சி தாக்குதல் உள்ளிட்டவை காரணமாகவும் மா விளைச்சல் குறைந்துள்ளது.

கடந்தாண்டை விட நடப்பாண்டில் மாவிளைச்சல் 90 சதவீதம் சரிந்துள்ளது. மாமரத்துக்கு மருந்து தெளித்தும் பலனில்லை. ஒரு ஏக்கருக்கு மருந்து, தண்ணீர் என ரூ. 4 லட்சம் வரை செலவு செய்தும் உரிய லாபம் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் முதல் தர மாம்பழம் மார்க்கெட்டுக்கும், 2-ம் தரம் மாங்கூழ் தொழிற்சாலைக்கும் அனுப்பி வைக்கப்படும். கடந்தாண்டு, மாங்கூழ் தொழிற்சாலைக்கு மட்டும் தினமும் 400 முதல் 500 டன் மாம்பழம் அனுப்பி வைக்கப்பட்டது. நடப்பாண்டில் தினமும் 140 முதல் 150 டன் வரை மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது, கிளிமூக்கு ரகம் கிலோ ரூ.20, செந்தூரா ரூ.23, அல்போன்சா ரூ.35, மல்கோவா ரூ.80 முதல் ரூ.90, பங்கனப்பள்ளி ரூ.25-க்கு என மொத்த விற்பனை செய்யப்படுகிறது. என்றார்.