மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் எப்போது திறக்கப்படும்?


மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டி திறப்பு விழா கண்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில் பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.119 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘மால்’ (வணிக வளாகம்) இன்னும் திறக்கப்படவில்லை. இந்த மால் திறக்கப்பட்டு கடைகள் ஏலம் விட்டால் மாநகராட்சிக்கு ரூ.7 கோடி வரை மாதந்தோறும் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் நகரின் மையத்தில் 1921ம் ஆண்டு முதல் மத்திய பேருந்து நிலையமாக செயல்படத் தொடங்கியது பெரியார் பேருந்து நிலையம்.

கடந்த 1971ம் ஆண்டு முதல் இந்த பேருந்து நிலையம் பெரியார் பேருந்து நிலையமாக செயல்படத் தொடங்கியது. அதன்பின் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆரப்பாளையம், மாட்டுத்தவாணி போன்ற இடங்களில் புதிய புறநகர் பேருந்து நிலையங்கள் செயல்படத் தொடங்கின. பெரியார் பேருந்து நிலையம் மாநகர பேருந்து நிலையமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மதுரையின் பாரம்பரிய பெரியார் பேருந்து நிலையம் இடித்து புதிய பேருந்து நிலையம் கட்டி அதனை கடந்த 2021-ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தப் பேருந்து நிலையம் வளாகத்தில் மாநகராட்சிக்கு நிரந்தர வருவாய் தரக்கூடிய வகையில் ரூ.119 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் 474 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்குவதற்கு வரும் பொதுமக்களுக்கும், பணிபுரியும் பணியாளர்களுக்கும் வாகனங்களை நிறுத்த ‘மல்டிலெவல் பார்க்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களும் இந்த வாகன நிறத்தத்தில் வாகனங்களை நிறுத்தி செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கடைகளில் பழைய பெரியார் பேருந்து நிலையத்தில் கடைகள் வைத்து வியாபாரம் செய்த 446 வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி, அவர்களுக்கு 446 கடைகள் ஒதுக்கப்படுகிறது.மீதமுள்ள கடைகள், டெண்டர் வைத்து ஏலம் விடப்படுகிறது.

இந்த கடைகள் ஏலம் விட்டு வாடகைக்கு விட்டால் மாநகராட்சிக்கு மாதந்தோறும் ரூ.7 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பேருந்து நிலையம் கட்டி திறந்து 2 ஆண்டுகளை நெருங்கும் நிலையில், பேருந்து நிலையம் வளாகத்தில் கட்டிய வணிக வளாகம் திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது. பெரியார் பேருந்து நிலையம், ஆரம்பத்தில் மிக பிரமாண்டமாகவும், விசாலமாகவும் கட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டுவதற்காக தனியாரைப்போல் மால் வணிக வளாகம் கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடித்து தற்பாது வரை திறக்கப்படாதால் அதன் பின்னணியில் அரசியல் எதுவும் உள்ளதாக என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டிய மால் திறக்கப்படாததால் மாநகராட்சிக்கு மாதந்தோறும் ரூ.7 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநரகாட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ”90 சதவீதத்திற்கு மேல் பணிகள் முடிந்துவிட்டது. எலக்ட்ரிக் பணிகள் நடக்கிறது. அதுவும் முடியும் தருவாயில் விரைவில் வளாகம் திறக்கப்படும்’’ என்றனர். மாநகராட்சி மேயர் இந்திராணியிடம் கேட்டபோது, ‘‘சிறு சிறு எலெக்ட்ரிக் பணிகள் மட்டும் மீதமுள்ளது. இன்னும் 2 மாதத்தில் இந்த மால் (வணிக வளாகம்) திறக்கப்படும், ’’ என்றார்.