புதிய பேருந்துநிலைய மேற்கூரை விழுந்து கணவன் மனைவி உட்பட 3 காயம் @ கும்பகோணம்


கும்பகோணம்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உணவு விடுதியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் கணவன், மனைவி உட்பட 3 பேர் காயமடைந்தனார். அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகப்பட்டிணம் மாவட்டம், கீழ்வேளூர் சிவாஜி நகரைச் சேர்ந்த சண்முகம் (60). இவரது மனைவி ஹேமலதா (56) மற்றும் திருவிடைமருதூர் வட்டம், திருவிசைநல்லூரைச் சேர்ந்த குழந்தைசாமி மனைவி சணல்மேரி (70) ஆகிய 3 பேரும் கும்பகோணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு, தங்களது ஊருக்குச் செல்வதற்காக கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.

பின்னர், அங்கிருந்த உணவு விடுதியில் 3 பேரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திடீரென அந்த உணவு விடுதியின் மேற்கூரை சுமார் 10 அடிக்கு மேல் பெயர்ந்து, அவர்கள் 3 பேர் மீதும் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து தொடர்பாக கும்பகோணம் மேற்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.