கோவையில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிக வாக்குகளை இழந்த அதிமுக!


கோவை: கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலை ஒப்பிடும் போது, தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுகவின் வாக்குகள் சரிந்துள்ளன. திமுகவுக்கு கணிசமான அளவு வாக்குகள் அதிகரித்துள்ளன.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,50,132 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜி.ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகளும் பெற்றனர்.

கோவை மக்களவைத் தொகுதியில் சூலூர், பல்லடம், சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தமிழகத்தில் ஆளும் கட்சியாக திமுக இருந்தாலும், கோவை மாவட்டத்தில் அக்கட்சிக்கு எம்.எல்.ஏக்கள் இல்லை. சட்டப் பேரவைத் தேர்தலில் கோவையில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வென்றது.

இந்நிலையில், கோவை மக்களவைத் தேர்தல் முடிவுகளை, சட்டப்பேரவைத் தொகுதி முடிவுகளோடு ஒப்பிடும்போது அதிமுகவின் வாக்குகள் பல மடங்கு குறைந்துள்ளன. அதேசமயம் திமுகவின் வாக்குகள் அதிகரித்துள்ளன.

நிலையான வாக்கு வங்கி இருப்பதால், கோவை மக்களவைதேர்தலில் அதிமுக வேட்பாளர்வெற்றி பெறுவார் அல்லது இரண்டாமிடம் பிடிப்பார் என அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கு மாறாக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட, நடப்பு மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பல்லடத்தில் 75,643 வாக்குகள், சூலூரில்66,006 வாக்குகள், சிங்காநல்லூரில் 50,015 வாக்குகள், கோவை தெற்கில் 34,165 வாக்குகள், கோவைவடக்கில் 52,456 வாக்குகள், கவுண்டம்பாளையத்தில் 83,589வாக்குகள் குறைந்துள்ளன.

அதே சமயம், திமுக வேட்பாளருக்கு பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் 19,927 வாக்குகள், சூலூரில் 8,983 வாக்குகள், சிங்காநல்லூரில் 12,979 வாக்குகள், கோவை தெற்கில் 19,546 வாக்குகள், கோவை வடக்கில் 3,510 வாக்குகள், கவுண்டம்பாளையத்தில் 3,116 வாக்குகள் அதிகரித்துள்ளன.

இது அடுத்து நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.