டெல்லிக்கு கூடுதல் தண்ணீர் முதல் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> டெல்லிக்கு கூடுதல் தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: டெல்லியில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் விதமாக, டெல்லிக்கு 137 கனஅடி உபரி நீரை திறந்து விட இமாச்சலப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும் வஜிராபாத் தடுப்பணையில் இருந்து உபரி நீரை டெல்லிக்கு கொண்டு செல்ல வழிவகை செய்ய ஹரியாணா அரசுக்கும் உத்தவிட்டுள்ளது.

> பிரதமர் மோடி பதவியேற்பில் வங்கதேச பிரதமர், இலங்கை அதிபர் பங்கேற்பு: தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பிரதமராக நரேந்திர மோடி புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் சனிக்கிழமை மூன்றாவது முறை பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கை அதிபரும், வங்கதேச பிரதமரும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இருப்பதாக உறுதி தெரிவித்துள்ளனர்.

> ‘அமைச்சராக விரும்பவில்லை; கேரளாவுக்கான திட்டங்கள் வேண்டும்’: மத்திய அமைச்சராக விரும்பவில்லை என்றும், கேரள மக்களின் நலனுக்காக அவர் முன்மொழியும் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புவதாக திருச்சூர் பாஜக எம்.பி.,சுரேஷ் கோபி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். நடிகரும் அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி நடந்து முடிந்த மக்களவைத் தேர்லில் வெற்றி பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கேரளாவில் பாஜகவை காலடி பதிக்க வைத்துள்ளார்.

> 18வது மக்களவையில் 41 கட்சிகளுக்கு பிரதிநித்துவம்: விரைவில் அமைக்கப்பட உள்ள 18-வது மக்களவையில் 41 கட்சிகள் பிரதிநிதித்துவம் பெற இருக்கின்றன என்று தேர்தலுக்கு பிந்தைய தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை புதன்கிழமை கலைக்கப்பட்ட 17வது மக்களவையில் 36 ஆக இருந்தது. மொத்தமுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மட்டும் 339 உறுப்பினர்களைக் (பாஜக - 240, காங்., 99) கொண்டுள்ளது.

> உ.பி. காங்கிரஸ் தொண்டர்களுக்கு பிரியங்கா வாழ்த்து: மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச காங்கிரஸ் தொண்டர்களின் பணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, “உத்தரபிரதேச மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பொதுமக்களின் கவலைகள் மிக முக்கியமானது என்று தெளிவான செய்தியை புரிய வைத்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

> நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு: ஓடும் ரயிலில் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர். முன்னதாக, இந்த விவகாரத்தில் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன், கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய 4 பேரும் மே 31-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவு வெளியான பின்னர் ஆஜராவதாக அவர்கள் தகவல் அனுப்பினர்.

> ஓ.பி.எஸ்ஸுக்கு கே.பி.முனுசாமி பதிலடி: “மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவின் வேட்பாளரையும், இரட்டை இலை சின்னத்தையும் எதிர்த்து நின்றார். அப்படி செய்தவருக்கு எந்த வகையில் அதிமுக தொண்டர்களை அழைப்பதற்கு உரிமை இருக்கிறது. ஜெயலலிதாவை குறிப்பிடுவதற்கு ஓபிஎஸ்ஸுக்கு இனியும் எந்த உரிமையும் இல்லை.” என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக, “அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுப்போம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.

> முடிவுக்கு வந்தது மக்களவைத் தேர்தல் நடைமுறைகள்: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த மார்ச் 16-ம் தேதி அமல்படுத்தப்பட்டு வந்த தேர்தல் நடத்தை விதிகள் வியாழக்கிழமை விலக்கிக் கொள்ளப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தல் ஜூன் ஒன்றாம் தேதி நிறைவடைந்தது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவடைகின்றன.

> “இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்” - கனடா பிரதமர்: பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தனது அரசு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே கசப்பான உறவு நீடித்து வரும் நிலையில் ட்ரூடோ இதனை தெரிவித்துள்ளார்.

> காசா பள்ளி மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 27 பேர் உயிரிழப்பு: காசாவில் உள்ள பள்ளி வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தப் பள்ளியில் ஹமாஸ் போராளிகள் தங்கி இருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனிடையே, காசா மீதான போர் காரணமாக புலம்பெயர்ந்த மக்கள் அந்தப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.