கோடை விடுமுறை முடியும் தருவாயில் குமரியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்!


கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை பார்க்க முக்கடல் சங்கமத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கோடை விடுமுறை நிறைவடையும் தருவாயில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. நாளை அதிகமான சுற்றலா பயணிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரியில் கோடை சீசனுக்கு மத்தியில் மழை பெய்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. வருகிற 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கன்னியாகுமரி மட்டுமின்றி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்திலுமே கூட்டம் அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண்பதற்கும், சூரியன் மறைவதை பார்ப்பதற்கும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்த நிலையில் சூரிய உதயம் மற்றும் மறைவதை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் நேற்று காலை சூரிய உதயம் தென்பட்டது. இன்று காலையிலும் சூரிய உதயத்தை பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் முக்கடல் சங்கமம், மற்றும் கடற்கரையில் குவிந்தனர். ஆனால், இன்று சாரல் மழை பெய்ததையடுத்து சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 2 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையை கண்டுகளித்துச் சென்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியதையடுத்து கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

திற்பரப்பு அருவியிலும் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர். 8 நாட்களுக்கு பின்னர் கடந்த இரண்டு நாட்களாக திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

கோடை விடுமுறை 5-ம் தேதியுடன் முடியவுள்ள நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு 30-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதுடன் கடைகள் அடைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதால் ஜூன் 1-ம் தேதி வரை கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. இதனால் நாளை மாலை வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். அதன் பின்னர் 1-ம் தேதி மாலையில் இருந்து அனுமதிக்கப்படுவர்.

x