உதகை தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் நினைவு தினம் இன்று


மெக் ஐவர் நினைவு தினம்

உதகை: உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய வில்லியம் கிரெகம் மெக் ஐவரின் 148-வது நினைவு தினம் இன்று (சனிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள சிறப்பு வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா உலகளவில் பிரசித்தி பெற்றது 1848-ம் ஆண்டு மெக்ஐவரால் பூங்கா அமைப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு பல நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட அரிய வகை மரங்கள் நடப்பட்டு 1867-ம் ஆண்டு பணிகள் நிறைவு பெற்றது. மெக்ஐவர் 19 வருடங்கள் அயராது உழைத்து உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்க முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

பிரசித்தி பெற்ற அரசு தாவிரவியல் பூங்கா 22 ஹெக்டர் பரப்பில் பல பிரிவுகளாக அமைந்துள்ளது. தோட்டக்கலைத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இப்பூங்காவிற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முதல் உள்ளுர்வாசிகள் வரை வந்து செல்கின்றனர். இப்பூங்காவில் போன்சாய் மரங்கள், மூலிகைச் செடிகள், அழகான புதர்கள், பன்னம் என்றழைக்கப்படும் ஒருவகை வெளிநாட்டு செடிகள் போன்ற ஆயிரக்கான செடிகொடிகளும் மரங்களும் உள்ளன.

பூங்காவின் மையத்தில் 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் ஒன்றும் உள்ளது. இப்பூங்காவில் ஆறு பிரிவுகள் உள்ளன. அவை கீழ்தள தோட்டம், மேல்தள அழகான நீருற்றுப் பகுதி, புதிய தோட்டம், இத்தாலியன் தோட்டம், கண்ணாடி மாளிகை, செடி வளர்ப்பகம் ஆகிவைகளாகும். இத்தனைச் சிறப்பு வாய்ந்த பூங்கா அமைய காரணமாக இருந்த வில்லியம் கிரெகம் மெக் ஐவரின் 148-வது நினைவு தினம் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

மெக் ஐவர் ஸ்காட்லாந்தில் உள்ள டாலரில் பிறந்தார், அங்கு அவரது தந்தை ஜான் க்ரைப்பில் ஒரு நர்சரி தோட்டத்தை நிறுவும் வேலையில் சேர்ந்து பின்னர் அங்கு குடியேறினார். மெக் ஐவர் பிரையோபைட்டுகளில் ஆர்வம் கொண்டு 1847-ல் பிரிட்டிஷ் ஹெபாட்டிக்ஸ் பாக்கெட் ஹெர்பேரியத்தை வெளியிட்டார். அவர் இறக்கும் வரை உதகையில் பணியாற்றினார். தோட்டங்களை நிறுவிய பிறகு மெக் ஐவர் சின்கோனா தோட்டங்களின் கண்காணிப்பாளராக ஆனார்.

1847-ம் ஆண்டின் தொடக்கத்தில், தோட்டக்கலைச் சங்கம் மற்றும் பொதுத் தோட்டத்தை உருவாக்கும் நோக்கில் நன்கொடைகள் மற்றும் சந்தாக்கள் மூலம் நிதி திரட்டப்பட்டது. லஷிங்டன் ஹால் மற்றும் ஜெனரல் செவெல்லின் (தற்போதைய கேட் ஹவுஸ்) சொத்துக்கு இடையே உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் ஒரு பொதுத் தோட்டம் அமைக்க முன்மொழியப்பட்டது. காடாக இருந்த மேல் பகுதியையும், சதுப்பு நிலமாக இருந்த கீழ் பகுதியையும் அழகிய தோட்டமாக மாற்றினார் மெக் ஐவர். இதுவே தற்போதைய அரசு தாவரவியல் பூங்காவாக வீற்றிருக்கிறது.