மத்தி மீன்கள் அதிகம் கிடைப்பதால் நாகை மீனவர்கள் மகிழ்ச்சி


மத்தி மீன்களுடன் மீனவர்.

நாகப்பட்டினம்: மத்தி மீன்கள் அதிகம் கிடைப்பதால், பட்டினச்சேரி மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக கடலோரப் பகுதிகளில் அதிகளவு கிடைக்கும் மத்தி மீன்கள், கேரள மாநில மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. உடல்ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் புரதச்சத்து நிறைந்த மீன் என்பதால், மத்தி மீனை கேரள மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் பட்டினச்சேரி, நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், கல்லார், செருதூர் ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் பைபர் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

அண்மையில் ஏற்பட்ட புயல் காரணமாக 10 நாட்களுக்கு மேலாகமீன் தொழில் முடங்கிய நிலையில், நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 3 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இதில், நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலைகளில் அதிகளவில் மத்தி மீன்கள் கிடைத்தன.

நாகூர் பட்டினச்சேரி மீன்பிடி துறைமுகத்தில் நேற்று 12 டன் அளவுக்குகுவிந்திருந்த மத்தி மீன்களை வாங்க நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். இதனால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு கிலோ மத்தி மீன் ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனையானது. மத்தி மீன்களை வியாபாரிகள் அதிகளவில் வாங்கி கேரளா மற்றும் ஆந்திராவுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து நாகூர் பட்டினச்சேரி பைபர் படகுகள் மீனவர் சங்கத்தின் செயலாளர் எஸ்.தன்ராஜ் கூறியது:நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராமத்தில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் உள்ளன.

மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால், பைபர் படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறோம். தற்போது மத்தி சீசன் என்பதால், அதிக அளவு மத்தி மீன் கிடைத்துள்ளது. இதனால், மீனவர்களுக்கு லாபம் கிடைக்கிறது என்றார்.

x