கோவை கோட்டத்தில் சாலை விரிவாக்கத்துக்காக 10 ஆண்டுகளில் 7,644 மரங்கள் வெட்டி அகற்றம்


கோப்புப்படம்

கோவை: கோவை கோட்டத்தில் சாலை விரிவாக்க பணிக்காக கடந்த 10 ஆண்டுகளில் 7,644 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஈடாக புதிய மரங்களை நடவு செய்து வளர்ப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கோவையில் அவிநாசி சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை,மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, திருச்சி சாலை ஆகியவை பிரதான சாலைகளாக உள்ளன. அதிகரிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தடுக்க முக்கிய சாலைகளை நான்கு மற்றும் ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்தல், மேம்பாலங்கள் கட்டுதல் போன்ற பணிகள் தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணிகளுக்காக சாலையோரங்களில் இருந்த மரங்கள்வெட்டப்படுகின்றன. கோவையில்அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலைகளில் இருந்த பல நூறு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. மரங்களை வெட்டினால், அதற்கு ஈடாக 10 மடங்கு அதிக எண்ணிக்கையில் மரங்களை நட்டு வளர்க்க நீதிமன்றங்கள் அறிவுறுத்தியுள்ளன. ஆனால் இவை சரிவர பின்பற்றப்படுவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து சமூக செயல்பாட்டாளரும், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவருமான வே.ஈஸ்வரன் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘கோவை கோட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட சாலைகளில், கடந்த 10 ஆண்டுகளில் வெட்டப்பட்ட மரங்கள், அதற்கு ஈடாக நடவு செய்யப்பட்ட மரங்கள் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக நெடுஞ்சாலைத்துறையிடம் இருந்து பெற்றேன்.

அதன்படி, செங்கப்பள்ளி முதல்வாளையாறு வரை உள்ள தேசியநெடுஞ்சாலையில் 4,351 மரங்களும், கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் 2,239 மரங்களும், ஈரோடு - பவானி -மேட்டூர் - தொப்பூர் பகுதிகளில் 1,054 மரங்களும் என மொத்தமாக 7,644 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

இதற்கு ஈடாக 76,440 மரங்கள்நடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடப்படவில்லை. செங்கப்பள்ளி - வாளையாறு திட்டத்துக்காக அகற்றப்பட்டதற்கு ஈடாக இதுவரை13 ஆயிரம் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளதாகவும் , மேலும்30,351 மரங்கள் நடவு செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கோவை - பொள்ளாச்சி சாலையில் அகற்றப்பட்ட மரங்களுக்கு ஈடாக புதிய மரங்கள் நடவு செய்யும்பணி மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எந்தெந்த ஊராட்சிகளில் எவ்வளவு மரங்கள் நடப்பட்டன என்ற விவரம் தரப்படவில்லை.

ஈரோடு-பவானி-மேட்டூர்- தொப்பூர் பகுதியில் அகற்றப்பட்ட மரங்களுக்கு ஈடாக புதியதாக 10,540 மரங்கள் நடவு செய்யும் நிதியை வனத்துறையினரிடம் தந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அகற்றப்பட்ட மரங்களுக்கு ஈடாக புதிய மரங்கள் நட்டு, முறையாக வளர்க்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

கிரீன் கேர் அமைப்பின் தலைவர் சையது கூறும்போது,‘‘வளர்ச்சிப் பணிகளுக்காக மரங்கள் அகற்றப்படுகின்றன. ஆனால், அதற்கு ஈடாக நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை குறைவே. மக்கள் தொகை அதிகரித்து, மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மரங்களை வெட்டுவதை தவிர்த்து, மறுநடவு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும். மரங்கள் அழிப்பால் காலநிலைமாறி கோவையில் வெப்பம் அதிகரித்துள்ளது. இந்நிலை மாற மரங்களை நடவு செய்து,முறையாக பராமரிக்க வேண்டும்’’என்றார்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘சாலை விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக மரங்கள் அகற்றப்படுகின்றன. அதற்கு ஈடாக கிடைக்கும் இடங்களில் அதிக எண்ணிக்கையில் மரங்கள் நடவு செய்யப்படுகின்றன. அவை முறையாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன’’ என்றனர்.