பழநி, திண்டுக்கல்லில் தங்கும் விடுதிகள் ஹவுஸ் ஃபுல் @ அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு


பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஆக.24, 25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடப்பதால் பழநி, திண்டுக்கல்லில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் கடவுள் முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பழநியில் வரும் ஆக.24, 25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளுக்காக 20 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடத்துவது தொடர்பாக மே 11-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து, மாநாடு நடைபெற உள்ள பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியை அமைச்சர் பார்வையிட்டார். இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் தங்களை பதிவு செய்வதற்கும், முருகனை கருப்பொருளாக கொண்ட ஆய்வுக் கட்டுரைகளை ஜூன் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com என்ற தனி இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சமய பெரியோர்கள், ஆன்மிக அன்பர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டுக்காக வரும் சிறப்பு அழைப்பாளர்கள், வெளிநாட்டு பக்தர்களை தங்க வைப்பதற்காக பழநி மற்றும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் கோயிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் ஆக.23 முதல் ஆக.26-ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டு ஹவுஸ் புல்லாகி உள்ளது.

இது குறித்து பழநியில் உள்ள தனியார் விடுதி உரிமையாளர்கள் கூறும் போது, அனைத்துலக முருகன் மாநாட்டுக்காக அறநிலையத் துறையில் இருந்து ஆக.23 முதல் ஆக.26-ம் தேதி 4 நாட்களுக்கு அனைத்து அறைகளையும் வேறு யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். அதனால், அந்த நாட்களில் சாதாரண அறைகளை தவிர மற்ற அறைகள் காலியாக இல்லை என அறைகள் கேட்டு தொடர்பு கொள்பவர்களிடம் தெரிவித்து வருகிறோம் என்றனர்.

x