“எதிர்க்கட்சிகள் இப்போதே வாக்கு இயந்திரத்தை குறைகூற தொடங்கிவிட்டன” - மோடி


பாட்னா: "தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போதே வெளிவரத் தொடங்கிவிட்டன. ஆம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்க்கட்சிகள் குற்றம் சொல்லத் தொடங்கிவிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கான கருத்துக் கணிப்பாகவே இதைப் பார்க்கிறேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போதே வெளிவரத் தொடங்கிவிட்டன. ஆம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்க்கட்சிகள் குற்றம் சொல்லத் தொடங்கிவிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கான கருத்துக் கணிப்பாகவே இதைப் பார்க்கிறேன்.

எல்.ஈ.டி பல்புகளின் காலம் இது. ஆனால், பிஹாரில் சிலர் லாந்தர் விளக்கை (ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சின்னம்) கைகளில் வைத்துக்கொண்டு அலைகிறார்கள். அந்த விளக்கு ஒரு வீட்டுக்கு மட்டுமே (லாலு வீட்டுக்கு) ஒளி தரும். அந்த விளக்கு பிஹார் முழுவதையும் இருளில் தள்ளும்.

இண்டியா கூட்டணியின் மற்றொரு சதியை கொல்கத்தா உயர் நீதிமன்றம் நாட்டின் முன் வெளிப்படுத்தியுள்ளது. இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள், மேற்கு வங்கத்தில் 77 முஸ்லிம் சாதிகளுக்கு ஓபிசி அந்தஸ்தை வழங்கினர். இண்டியா கூட்டணிக்காக வாக்கு ஜிகாத் நடத்தியவர்கள் அதன் மூலம் பலன் அடைந்தனர். அரசியல் சட்டத்தை மாற்றி நாடு முழுவதும் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க விரும்புவதை ஆர்ஜேடி - காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி மறுக்க முடியாது.

ஆனால், மோடி உயிருடன் இருக்கும் வரை எஸ்சி - எஸ்டி - ஓபிசி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பறிக்க நான் அனுமதிக்க மாட்டேன். பிஹாரில் உள்ள சமூக நீதியின் புனித பூமியிலிருந்து நாட்டுக்கும் பிஹாருக்கும் இன்று உத்தரவாதம் அளிக்கிறேன்.

இந்தத் தேர்தல் நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல். உங்கள் வாக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், உங்கள் வாக்கு பிரதமரைத் தேர்ந்தெடுக்கப் போகிறது. இந்தியாவுக்கு எப்படிப்பட்ட பிரதமர் தேவை? சக்தி வாய்ந்த இந்த நாட்டின் பலத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் பிரதமர் இந்தியாவுக்கு தேவை.

ஆனால், இண்டியா கூட்டணி 5 ஆண்டுகளுக்கு 5 பிரதமர்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆழமான வகுப்புவாதிகள், தீவிர சாதிவெறியர்கள், தங்கள் குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே பாடுபடக்கூடியவர்கள். மற்றவர்களை அவர்கள் பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள்" இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

x