பிரசாந்த் கிஷோருக்கு பாஜக பணம்: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு


தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஒரு பாஜக முகவர், பாஜக தனது தேர்தல் உத்தியின் ஒரு பகுதியாக அவருக்கு பணம் கொடுக்கிறது என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று தேர்தல் வியூக நிபுணரும் ஜன் ஸ்வராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் கூறி வருகிறார்.

இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று கூறியதாவது: தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து வருகிறது. எனவே பாஜக வெற்றி பெறும் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக 3-4 கட்ட தேர்தலுக்குப் பிறகு பிரசாந்த் கிஷோரை அக்கட்சி அமர்த்தியுள்ளது. அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டதால் பிரசாந்த் கிஷோரை தனது கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமித்ததாக நிதிஷ் குமார் கூறினார். இதனை இதுவரை அமித் ஷாவோ அல்லது பிரசாந்த் கிஷோரோ மறுக்கவில்லை.

அவர் தொடக்கம் முதலாக பாஜகவுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். அவர் எந்தக் கட்சியில் சேருகிறாரோ அந்தக் கட்சி அழிந்து விடும். பிரசாந்த் கிஷோர் சம்பளம் பெறும் மாவட்டத் தலைவர்களை வைத்துள்ளார். ஒருவேளை பாஜக கூட இவ்வாறு தரவில்லை.

பிரசாந்துக்கு பணம் எங்கிருந்து வருகிறது எனத் தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நபர்களுடன் அவர் வேலை செய்கிறார். உங்கள் டேட்டாவை எடுத்து இன்னொருவருக்கு தருகிறார்.

அவர் பாஜகவின் முகவர் மட்டுமல்ல. பாஜக மனோபாவம் கொண்டவர். பாஜகவின் சித்தாந்தத்தை அவர் பின்பற்றுகிறார். பாஜக தனது தேர்தல் உத்தியின் ஒரு பகுதியாக அவருக்கு பணம் கொடுக்கிறது. இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.