அக்னி வீரர் திட்டம்: ராகுல் குற்றச்சாட்டுக்கு அமித் ஷா பதிலடி


உள்துறை அமைச்சர் அமித் ஷா

காங்க்ரா: "பொய்யான விஷயத்தை மட்டுமே பிரச்சினையாக்க வேண்டும் என்ற புதிய பாரம்பரியத்தை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். இதற்கு சிறந்த உதாரணம் தான் அக்னி வீரர் திட்டம் குறித்த பேச்சு" என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பின், இந்த நாட்டின் அரசியலே மாறிவிட்டது. இதற்கு முன், அரசியல் கட்சிகள், உண்மையான பிரச்சினைகளை மக்கள் முன் திரித்துப் பேசுவார்கள். பொய்யான விஷயத்தை மட்டுமே பிரச்சினையாக்க வேண்டும் என்ற புதிய பாரம்பரியத்தை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். இதற்கு சிறந்த உதாரணம் தான் அக்னிவீரர் திட்டம்.

அக்னிவீரர் திட்டத்தில் சேர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு 75% அக்னி வீரர்களுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும், அவர்களின் வாழ்க்கையே நாசமாகிவிடும் என்றும், இந்த திட்டம் குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்றும் ராகுல் காந்தி கூறி இருக்கிறார். அக்னிவீரர் திட்டம் குறித்த ராகுல் காந்தியின் கருத்து முற்றிலும் தவறானது. இத்தகைய கருத்து நாடு முழுவதும் பரப்பப்படுகிறது.

100 பேர் அக்னி வீரராக மாறினால், அவர்களில் 25% பேர் ராணுவத்தில் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவார்கள் என்பது திட்டம். மீதமுள்ள 75% பேருக்கு, பாஜக ஆளும் மாநிலங்கள் தங்கள் மாநில காவல்துறையில் 10 - 20% இடஒதுக்கீடு வழங்கியுள்ளன. மத்திய அரசின் துணை ராணுவப் படையிலும் 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு தவிர, அரசுப் பணிக்கு முயலும்போது, வயது, தேர்வு போன்ற தேர்வு செயல்முறைகளில் நிறைய தளர்வுகளை அவர்கள் பெறுவார்கள். உடல் பரிசோதனைகள் மூலம் அவர்கள் செல்ல வேண்டியதில்லை.

இதற்குப் பிறகு, வேலை கிடைக்காத அக்னி வீரர் இருக்க வாய்ப்பில்லை. பல செக்யூரிட்டி நிறுவனங்களும், அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளன. 4 வருடங்கள் பணியில் இருக்கும்போது அவர்கள் கணிசமான சம்பளத்தை வாங்குவார்கள். அதன் பிறகு நிரந்தர வேலை கிடைக்கும். ஆனால், தனது கட்சியின் நலனுக்காக ராகுல் காந்தி முழுப் பொய்களைச் சொல்லி மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்" என தெரிவித்தார்.