ஜூன் 6-ல் பள்ளிகள் திறப்பு முதல் பாஜகவுக்கு சீமான் சவால் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> தமிழகத்தில் ஜூன் 6-ல் பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 6-ம் தேதி பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பள்ளிகளை திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

> சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தடை: கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே அனுமதி இன்றி தடுப்பணை கட்டினால் தடை விதிக்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் வெள்ளிகிழமை உத்தரவிட்டுள்ளது.

> சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட வழக்கு: சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர்.

> பாஜகவை விட வாக்குகள் குறைந்தால்... - சீமான் சவால்: ‘பாஜக தனித்து பெற்ற வாக்குகள் நாம் தமிழரை விட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்து விடுகிறேன்’ என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

> தமிழகத்தில் மே 30 வரை மிதமான மழை வாய்ப்பு: தமிழகத்தில் நாளை (மே 25) முதல் 30-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

> இறுதி வாக்குப்பதிவு தொடர்பான மனுவை ஒத்திவைப்பு: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குப்பதிவு குறித்த இறுதி முடிவினை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்ற மனுவினை பரிசீலனை செய்ய மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம். இந்த விவகாரத்தை மக்களவைத் தேர்தலுக்கு பின்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

> பிபவ் குமாருக்கு 4 நாள் நீதிமன்ற காவல்: ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மலிவாலை தாக்கிய வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு நான்கு நாட்கள் நீதிமன்ற காவல் வைக்கும் படி டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது.

> பிரஷாந்த் கிஷோருக்கு பாஜக நிதியுதவி செய்கிறது - தேஜஸ்வி யாதவ்: "பிரஷாந்த் கிஷோர் பாஜகவின் முகவர். பாஜக தோல்வியடைந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் மூன்று நான்கு சுற்று வாக்குப்பதிவு முடிந்த பின்பு ஒரு கதையை உருவாக்க அவர் அழைக்கப்பட்டுள்ளார். பிரஷாந்த் கிஷோர் பாஜக முகவர் மட்டும் இல்லை. பாஜக மனம் கொண்டவர், அதன் சித்தாந்த்தை பின்பற்றுபவர். பாஜக அதன் வியூகத்தின் ஒருபகுதியாக கிஷோருக்கு நிதியுதவி அளிக்கிறது" என்று பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

> அது கவுடாக்களின் குடும்ப பிரச்சினை - டி.கே. சிவகுமார்: முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடா தனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா திரும்பி ஆபாச வீடியோ விவகார வழக்கில் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று எச்சரித்திருந்த நிலையில் அதுகுறித்த கேள்விக்கு, அது கவுடாக்களின் குடும்ப பிரச்சினை அதில் நான் தலையிட விரும்பவில்லை என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

> ‘பாஜகவுக்குள் அசிங்கமான வாரிசு போர்’- அரவிந்த் கேஜ்ரிவால்: சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், "பாஜகவுக்குள் அசிங்கமான வாரிசுப் போர் நடக்கிறது என்றும், அமித் ஷாவுக்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதற்காக அனைத்து பெரிய தலைவர்களையும் பிரதமர் மோடி நீக்கிவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

x