போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு: விருப்பம் தெரிவிக்க மே 30 கடைசி நாள்


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அளிக்கப்படவுள்ள மருத்துவக் காப்பீட்டுக்கு மே 30-ம் தேதிக்குள் விருப்பம் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ரூ.7 ஆயிரம் என்ற அளவிலேயே ஓய்வூதியம் பெறுகின்றனர். 102 மாதங்களுக்கு மேலாக இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் மருத்துவச் செலவுக்கு போதிய பணமில்லாமல் தவித்து வருகின்றனர். எனவே, தங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக ஓய்வூதியர்கள் வலியுறுத்தி வந்தனர். அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஓய்வூதிய நிதி பொறுப்பாட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதன்படி, மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் போது ரூ.7,054 ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளவும், மாதம் தோறும் பிரீமியம் தொகையாக ரூ.588 ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யவும் ஓய்வூதியர்கள், ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஓய்வூதியர்கள் விருப்புரிமை வழங்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், மே 30-ம் தேதிக்கு மேல் அவகாசம் இல்லை என ஓய்வூதிய நிதி பொறுப்பாட்சி தற்போது தெரிவித்துள்ளது.

இதற்கு ஓய்வூதிய சங்கங்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே குறைவான ஓய்வூதியம் பெற்று வருவோரால் இவ்வளவு பணத்தை ப்ரீமியமாக செலுத்த முடியாது என்பதால் முன்பணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பதோடு மற்ற துறைகளைப் போல பிரீமியம் தொகை ரூ.497 செலுத்த உத்தரவிட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.