கேரளாவில் முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை: அதிகாரபூர்வ அப்டேட்


சென்னை: இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகளின்படி தென்மேற்கு பருவமழைக் காலம் என்பது ஜூன் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை அந்தமான் அருகே தொடங்கி, கேரளாவை நோக்கி வரும். கேரளாவில் மழை தொடங்குவதையே இந்திய வானிலை ஆய்வு மையம் கணக்கில் கொள்கிறது.

வடமேற்கு இந்தியாவில் நிலவும் குறைந்தபட்ச வெப்பநிலை, தென்னிந்திய பகுதிகளில் பெய்யும் கோடை மழையின் அதிகபட்ச அளவு, தென் சீனக் கடலில் இருந்து வெளியேறும் நீண்ட அலைக்கற்றையின் அளவு, தென்கிழக்கு இந்திய கடலில் வளிமண்டலத்தில் வீசும் காற்றின் வேகம், கிழக்கு இந்திய கடலில் வளிண்டல மேலடுக்கில் வீசும் காற்றின் வேகம், தென்மேற்கு பசிபிக் கடலில் இருந்து வெளியேறும் நீண்ட அலைக்கற்றையின் அளவு ஆகிய 6 விவரங்களின் அடிப்படையில், தென்மேற்கு பருவமழை தொடங்குவது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை தொடங்கும் வழக்கமான நாளாக ஜூன் 1-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதமாக ஜூன் 8-ம் தேதி கேரளாவில் தொடங்கியது. ஆனால், இந்த ஆண்டு ஒரு நாள் முன்பாக மே 31-ம் தேதியே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் மே 19-ம் தேதி அந்தமானில் தொடங்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் தமிழகத்துக்கு வழக்கமாக 33 செ.மீ மழை கிடைக்கும். கடந்த ஆண்டு தமிழகத்துக்கு 35 செ.மீ மழை கிடைத்தது. இது வழக்கத்தை விட 2 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டும் வழக்கத்தை விட அதிகமாக மழை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியான தகவலையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.