விவசாயிகளிடம் வரவேற்பு பெறாத பொட்டனேரி ராகி கொள்முதல் நிலையம்


மேச்சேரியை அடுத்த பொட்டனேரியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நேரடி ராகி கொள்முதல் நிலையம்.

மேட்டூர்: மேச்சேரி அருகே திறக்கப்பட்ட நேரடி ராகி கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகளிடம் வரவேற்பு இல்லாததால், ஒரு கிலோ ராகி கூட கொள்முதல் செய்யப்படவில்லை.

சேலம் மாவட்டம் ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் டிசம்பர், ஜனவரி, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் ராகி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் ராகி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் ராகிக்கு மக்களிடையே அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பொது விநியோக திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 கிலோ ராகி விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ராகி பியிரிடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக ராகியை கொள்முதல் செய்யும் வகையில், மாவட்டத்தில் முதல் முறையாக, ஓமலூர் அருகே நல்லாகவுண்டன்பட்டி, மேச்சேரியை அடுத்த பொட்டனேரி ஆகிய இடங்களில் கடந்த ஜனவரி மாத இறுதியில் ராகி கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் யாரும் ராகியை கொண்டு வராததால், ஒரு கிலோ ராகி கூட கொள்முதல் செய்யப்படாமல் பொட்டனேரி மையம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில் ராகி அதிகளவு பயிரிடப்படும் பகுதியில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக ராகியை கொள்முதல் செய்ய 2 மையங்கள் திறக்கப்பட்டன. ராகி குவிண்டாலுக்கு ரூ.3,846 (கிலோ ரூ.38.46) என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பொட்டனேரியில் உள்ள கொள்முதல் நிலையத்துக்கு ஒரு விவசாயி கூட வரவில்லை. கடந்தாண்டில் பருவ மழை பொய்த்ததால், ராகி சாகுபடி பரப்பும் குறைந்து, ஒரு சில விவசாயிகள் மட்டுமே ராகி சாகுபடியில் ஈடுபட்டனர்.

இவர்களின் இருப்பிடத்துக்கு வியாபாரிகள் நேரடியாக சென்று அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக கொடுத்து வாங்கிக் கொண்டனர். விவசாயிகளிடம் நாங்கள் நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் விலை குறைவாக இருப்பதாகக் கூறி தர மறுத்து விட்டனர். இதனால் பொட்டனேரியில் உள்ள கொள்முதல் நிலையத்தில் ஒரு கிலோ கூட கொள்முதல் செய்யப்படவில்லை. ஜூன், ஜூலை மாதங்களில் ராகி சாகுபடி மீண்டும் நடைபெறுவதால், கொள்முதல் நிலையத்தை செயல்படுத்துவதா அல்லது தற்காலிகமாக மூடுவதா என்பது குறித்து உயரதிகாரிகள் முடிவெடுப்பர், என்றனர்.