ரேபரேலி ஹனுமன் கோயிலில் ராகுல் வழிபாடு


மக்களவைத் தேர்தலின் 5-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று ரேபரேலியில் நடைபெற்றது. முதன்முறையாக ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி நேற்று அப்பகுதிக்கு வந்து பல்வேறு வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்தார். அங்கு வாக்குப்பதிவுக்காக வந்த வாக்காளர்களிடமும் அவர் கலந்துரையாடினார்.

முன்னதாக டெல்லியில் இருந்து லக்னோ விமான நிலையத்துக்கு நேற்று காலை வருகை தந்த ராகுல் காந்திக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் காரில், சாலை வழியாக ரேபரேலிக்கு வந்தார் ராகுல் காந்தி. அங்குள்ள புகழ்பெற்ற பீப்பலேஷ்வர் ஹனுமன் கோயிலில் அவர் வழிபாடு செய்தார்.

இதையடுத்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள், ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து ரேபரேலி மகாத்மா காந்தி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்துக்கும் சென்று ஆய்வு செய்தார்.

இங்குள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு ராகுல் சென்றபோது அவருடன் செல்பி எடுப்பதற்காக அவரை சுற்றி பொதுமக்கள் திரண்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீஸார் அவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர்.

x