குமரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பு: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்


நாகர்கோவில் அருகே பாறைக்காமடத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை நீடிக்கும் நிலையில், குடியிருப்புகளை நேற்று வெள்ளம் சூழ்ந்தது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது.நேற்று காலை முதல் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கனமழை நீடித்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அதிகபட்சமாக பாலமோரில் 51 மிமீ மழை பெய்தது.

தக்கலையில் 42 மிமீ , கோழிப்போர்விளையில் 23. 2 மிமீ, நாகர்கோவிலில் 10.2, ஆணைக்கிடங்கில் 12 மிமீ மழை பதிவானது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 48 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தற்போது 45.41 அடியாக உள்ளது. அணைக்கு 486 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மதகு வழியாக 538 கன அடி, உபரியாக 532 கனஅடி தண்ணீர் என, 1,000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் குழித்துறையாறு, கோதையாறில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே 23-ம் தேதி வரை கன்னியாகுமரி கடல்பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளில் 65 கிலோ மீட்டர் உயரம் வரை பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பைபர், நாட்டுப் படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டிருந்தன. நாகர்கோவில் மணிமேடையில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு போக்குவரத்து சிக்னல் சரிந்து விழுந்தது. நாகர்கோவில் நகர பகுதிகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கி வடியாமல் உள்ளது.

நாகர்கோவில் பாறைக் காமடத்தில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. குலசேகரம், திற்பரப்பு, பேச்சிப்பாறை மலையோர கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.