பிபவ் குமார் கைது முதல் டி.கே.சிவகுமார் மீதான குற்றச்சாட்டு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள் @ 2.30 PM


> கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் கைது: ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மலிவாலை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

> முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு: டெல்லியில் உள்ள ஏழு மக்களவை தொகுதிகளைச் சேர்ந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

> கர்நாடகா துணை முதல்வர் மீது பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு: பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ சர்ச்சையில் பிரதமர் மோடி மற்றும் குமாரசாமி மீது அவதூறு பரப்ப டி.கே. சிவகுமார் தனக்கு ரூ.100 கோடி அளிக்க முன்வந்ததாக பாஜக நிர்வாகி புகார் தெரிவித்துள்ளார்.

> 5-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு: நாடு முழுவதும் 49 மக்களவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (சனிக்கிழமை) மாலையுடன் நிறைவடைகிறது.

> ‘அமேதி, ரேபரேலியில் வெற்றி பெறுவோம்’: உத்தரப் பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

> “தவறு செய்திருந்தால் ...” - பிரதமர் ஆவேசம்: “ஒருசில தொழிலதிபர்களுக்கு மட்டும் எனது அரசு உதவுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார். அவர்கள் யாருக்காவது நான் முறைகேடாக உதவியிருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்” என்று பிரதமர் மோடி கூறினார்.

> கோவளம் கடற்கரையில் ஆட்சியர் தூய்மைபணி: சென்னை அருகே உள்ள கோவளம் கடற்கரை பகுதியை தன்னார்வ அமைப்பின் சார்பில் நடந்த தூய்மைப்படுத்தும் பணியினைத் தொடங்கி வைத்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ் தன்னார்வலர்கள், மாணவர்கள் உடன் இணைந்து கடற்கரை பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றினார்.

> கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்களுக்கு அறிவுரை: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் சர்வதேச மாணவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனை ஒட்டி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் அங்குள்ள தத்தம் மாணவர்களைப் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளன.

> 6 மாநிலங்களில் வெப்பம்; 3 மாநிலங்களில் கனமழை: ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார் ஆகிய 6 மாநிலங்களில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, கேரளா, தென் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

> தாய்லாந்து ஓபன் | அரை இறுதியில் இந்திய ஜோடி: தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.