“அடுத்த தலைமுறைக்கு வழிவிட மறுக்கிறார் மோடி” - உத்தவ் தாக்கரே


உத்தவ் தாக்கரே

தானே: "அடுத்த தலைமுறைக்கு வழிவிடுவதற்குப் பதிலாக, மீண்டும் தானே பிரதமர் ஆக வேண்டும் என நரேந்திர மோடி ஆர்வம் காட்டுகிறார்" என்று சிவ சேனா (யுபிடி) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் தானே மக்களவைத் தொகுதியில் தற்போதைய எம்பியும், தனது கட்சி வேட்பாளருமான ராஜன் விச்சாரேவை ஆதரித்து உத்தவ் தாக்கரே வாக்கு சேகரித்தார். தானே, மகாராஷ்டிர முதல்வரும் சிவ சேனாவில் பிளவை ஏற்படுத்தியவருமான ஏக்நாத் ஷிண்டேவின் செல்வாக்கு மிக்க பகுதி என்பதால், இந்த தொகுதி இரு தரப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்தததாக மாறியுள்ளது. இந்த தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே கட்சி சார்பில் நரேஷ் மஸ்கே போட்டியிடுகிறார்.

பிரச்சாரத்தின்போது பேசிய உத்தவ் தாக்கரே, “இந்த தொகுதியில் நடைபெறும் போட்டி விசுவாசத்துக்கும் துரோகத்துக்கும் இடையிலான மோதல். துரோகம் இழைத்தவர்களுக்கு தானே தொகுதி மக்கள் பாடம் புகட்ட வேண்டும். சிவசேனாவும் தானேவும் ஒரு தனித்துவமான பிணைப்பைக் கொண்டுள்ளன. சிவ சேனாவின் தொடக்க காலங்களில் கட்சியை காலூன்ற வைத்தவர்கள் தானே நகர மக்கள்தான்.

பிரதமர் நரேந்திர மோடி, என்னையும், சரத் பவாரையுமே தொடர்ந்து குறிவைத்துப் பேசுகிறார். எனது தலைமையிலான சிவ சேனாவை போலி சிவ சேனா என அவர் விமர்சிக்கிறார். அதேபோல், சரத் பவாரை, அலைந்து திரியும் ஆத்மா என விமர்சிக்கிறார். 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த நரேந்திர மோடி, அடுத்த தலைமுறைக்கு வழி விட்டிருக்க வேண்டும்.

மாறாக, மீண்டும் தானே பிரதமர் ஆக வேண்டும் என்பதிலேயே அவர் ஆர்வம் காட்டுகிறார். தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, அவர் வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார். மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது” என தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில், முதல் 4 கட்டத் தேர்தல்களில் 35 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டது. வரும் 20ம் தேதி நடைபெற உள்ள 5ம் கட்டத் தேர்தலில் மீதமுள்ள 13 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.