மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி!  


புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) மாலை சரியாக 7.23 நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

‘நான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, கடவுளின் பெயரால்..’ என்று தொடங்கி பிரதமராக மோடி பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. விழாவுக்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் பாரத் மாதா கி ஜே என்று பலத்த கோஷம் எழுப்பினர்.

பிரதமர் மோடியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவ்ராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், மனோகர் லால் கட்டார், ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். மொத்தம் 72 பேர் இன்று மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது முறை ஆட்சி: நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், தனிப் பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியை 3- வது முறையாக தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மோடி இன்று 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் நீல நிற ஓவர் கோட் கொண்ட உடை அணிந்து வந்திருந்தார்.

நேருவுக்கு பின்னர்... நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர் தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராகும் ஒரே நபர் என்ற அந்தஸ்த்தை நரேந்திர மோடி பெற்றுள்ளார். முன்னதாக, நேரு 1952, 1957, 1962 தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றுமுறை பிரதமராக இருந்தார். இந்நிலையில் தற்போது மோடி 2014, 2019, 2024 என தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று பிரதமராகி இருக்கிறார்.

உலகத் தலைவர்கள் பங்கேற்பு: மோடியின் பதவியேற்பு விழாவில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமால் தாஹல் பிரச்சந்தா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுகனாத், பூடான் பிரதமர் ஷெரிங் டாக்பே, வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா, செஷல்ஸ் துணை அதிபர் அகமது ஆஃபீஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். நேற்றே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் கார்கே பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.

x