பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி வந்த 7 நாட்டுத் தலைவர்கள்


புதுடெல்லி: டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இதையொட்டி 7 நாட்டுத் தலைவர்கள் டெல்லி வந்தடைந்துள்ளனர்.

கடந்த ஏப்.19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், அக்கட்சிக்கு தனிப் பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. அதேநேரம், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 293 இடங்களில் வென்று 3- வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர் 3வது முறையாக நாட்டின் பிரதமராகும் ஒரே நபர் என்ற அந்தஸ்த்தை பிரதமர் மோடி பெறுகிறார். நேரு 1952, 1957, 1962 தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமராக இருந்தார். இந்நிலையில் தற்போது மோடி 2014, 2019, 2024 என வென்று மூன்றாவது முறையாக பிரதமராகிறார்.

வெளிநாட்டுத் தலைவர்கள் வருகை: மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமால் தாஹல் பிரச்சந்தா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுகனாத், பூட்டான் பிரதமர் ஷெரிங் டாக்பே ஆகியோர் இன்று டெல்லி வந்தடைந்தனர்.

வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா, செசல்ஸ் துணை அதிபர் அகமது ஆஃபீஃப் ஆகியோர் நேற்றே (ஜூன் 8) இந்தியா வந்தனர். இவர்களில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் வருகை மிகுந்த கவனம் பெற்றுள்ளது. அண்மையில் மாலத்தீவு - இந்தியா இடையே நிலவிய அரசியல் சர்ச்சைகளே இதற்கு காரணம்.

இந்தியா வந்துள்ள பூட்டான் பிரதமர் ஷெரிங் டாக்பே கூறுகையில், “இந்தியா அபார வளர்ச்சி கண்டுள்ளது. சாலைகள், ரயில், விமான சேவைகள் என உள்கட்டமைப்பு வளர்ச்சியில் இந்திய வளர்ச்சி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாக உள்ளது” என்றார்.

புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளதால் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக குடியரசுத் தலைவர் மாளிகை பகுதியில் 5 கம்பெனி துணை ராணுவப் படையினர், தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள், ட்ரோன்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தரை முதல் வான்பகுதி வரையில் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.