டெல்லியில் டிரோன்கள், பலூன்கள் பறக்க தடை:  காவல் துறை ஆணையர் அறிவிப்பு


புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று, மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது. பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இன்று பொறுப்பேற்க உள்ளார்.

பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் இன்று பதவியேற்க உள்ளனர். டெல்லியில் இன்று மாலை 7.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

இதையொட்டி டெல்லியில் இன்றும் நாளையும் (ஜூன் 9, 10) டிரோன்கள், பாரா கிளைடர், பாரா மோட்டார், ஹைட்ரஜன் பலூன்கள், குவாட்காப்டர் போன்ற வானில் இயக்கப்படும் அனைத்து சாதனங்களும் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா கூறினார்.

இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், “கிரிமினல்கள், சமூக விரோத சக்திகள் அல்லது இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகள், டிரோன்கள் உள்ளிட்ட வான் சாதனங்களை பயன்படுத்துவன் மூலம் பொது மக்கள், உயரதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும்முக்கிய இடங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்” என்று கூறியுள்ளார்