எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி முதல் அடங்காத அதிமுக சலசலப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> மோடி பதவியேற்பு விழாவுக்கு தயாராகும் டெல்லி! நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ள நிலையில், டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய்ப்பட்டு வருகிறது. ட்ரோன்கள் பறக்கத் தடை, எல்லைகளில் கண்காணிப்பு, போக்குவரத்து மாற்றம் எனப் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5 கம்பெனி நாடாளுமன்ற பாதுகாப்புப் படையினர், என்எஸ்ஜி கமாண்டோக்கள், ட்ரோன்கள், ஸ்னைப்பர்கள் என பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகள் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு டெல்லியில் ஜி20 மாநாடு நடந்தபோது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு அம்சங்கள் இப்போதும் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லி வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவுத் துறை செயலர் முக்தேஷ் பர்தேசி வரவேற்றார்.

இதனிடையே, பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவை குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

> மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி!: காங்கிரஸ் கட்சியின் நீட்டிக்கப்பட்ட செயற்குழுக் கூட்டம் டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், ப. சிதம்பரம், அம்பிகா சோனி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “ நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து ஒற்றுமையாகவும் ஒன்றாகவும் செயல்படுவோம்” என்றார்.

இதன் தொடர்ச்சியாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை ஏகமனதாக தேர்வு செய்து காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கே.சி.வேணுகோபால், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியை மக்களவையில் வழிநடத்திச் செல்ல ராகுல் காந்தி சிறந்த தேர்வாக இருப்பார்” என்று கூறினார்.

சோனியா காந்தி - அதேவேளையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடந்த காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் சோனியா காந்தியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

> ராமோஜி ராவ் காலமானார்: ‘ஈ நாடு’ ஊடக நிறுவனரும், தொழிலதிபருமான ராமோஜி ராவ் காலை காலமானார். அவருக்கு வயது 87. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஹைதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட ராமோஜி ஃபிலிம் சிட்டியை நிறுவியவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமோஜி ராவ் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்ட பலரும் புகழஞ்சலி செலுத்தினர்.

> விருதுநகர் முடிவுகள்: தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்பு: வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக தேமுதிக அளித்த புகாரையடுத்து, விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விரிவான தகவல்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. இதையடுத்து, தேவையான அனைத்து ஆதாரங்களும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கும் என்றும் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

> கங்கனா ரனாவத் ஆவேசம்!: “குற்றம் செய்பவர்களுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்தால் நாட்டின் சட்டங்களை மீறி குற்றம் செய்ய அது அவர்களுக்கு ஓர் உந்துதலாக அமையும். அனுமதியின்றி, ஒருவரின் உடலைத் தொட்டு, தாக்குவது உங்களுக்கு சரி என்றால், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றத்தையும் நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றே அர்த்தம்” என்று தன்னை அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு ஆதரவானவர்களை பாஜக எம்.பி கங்கனா ரனாவத் சாடியுள்ளார்.

முன்னதாக, கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

போராடிய விவசாயிகளை பற்றி தவறான கருத்துகளை கூறியதற்காகவே ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்திருந்த அந்தப் பெண் காவலருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், கங்கனா ஆவேசமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

> நீட் தேர்வு முறைகேடு புகார் மீது விசாரணை: நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என தேசிய தேர்வு முகமை சார்பில் மத்திய உயர் கல்வித் துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார். அதேவேளையில், 24 லட்சம் மாணவர்களில் 1,600 மாணவர்களுக்கே பிரச்சினை என்றும், புகார்கள் குறித்து உயர்மட்ட குழு விசாரணை மேற்கொள்ளும் என்றும அவர் தெரிவித்தார்.

> வி.கே.பாண்டியன் மீதான விமர்சனம்: நவீன் கவலை: ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு வி.கே.பாண்டியனை விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனது வாரிசு யார் என்பது குறித்த கேள்வி எழும்போதெல்லாம் நான் ஒருவிஷயத்தை தெளிவாகச் சொன்னேன். எனது வாரிசு பாண்டியன் அல்ல. எனது வாரிசை ஒடிசா மக்கள் தீர்மானிப்பார்கள். பணிகளை நேர்மையாகச் செய்யக் கூடியவர் பாண்டியன். அதற்காக அவர் நினைவுகூரப்பட வேண்டும்" என்று முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

> “ஓபிஎஸ், சசிகலா பிரிந்து சென்றது முடிந்த கதை” - இபிஎஸ்: “ஒரு கட்சி தோல்வி அடைந்தால், மீண்டும் தோல்வி அடையும் என்பதில்லை. திட்டமிட்டு பொய்யான தகவல்களை தெரிவிக்கின்றனர். சசிகலா, ஓபிஎஸ் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்ந்து கட்சியை வழி நடத்தலாம் என்பது முடிந்து போன கதை. அவர்கள் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டதாகவும், அதனால் தான் பாஜக கூட்டணி அதிக வாக்குகள் பெற்றதாகவும் தவறான செய்திகள் வருகின்றன. திமுக 2019-ம் ஆண்டு தேர்தலில் 33.52 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்தத் தேர்தலில் 26.93 சதவீதம் வாக்குகளே பெற்று, திமுக-வின் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது. அதிமுகதான் கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அதேபோல, பாஜக-வும் குறைவான வாக்குகளையே பெற்றிருக்கிறது” என்றார்.

> ‘அதிமுக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு’: அனைத்துத் தலைவர்களிடமும் பேசி ஒருமித்த கருத்துடன் கட்சியை ஒருங்கிணைப்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்திருப்பதாக முன்னாள் எம்பி-யான கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ-வான ஜே.சி.டி.பிரபாகர், ஓபிஎஸ் அணியின் முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளரான வா.புகழேந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், “அதிமுக தொண்டர்களின் கருத்துகளை தெரிந்து கொண்ட பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து நிதர்சனத்தை எடுத்துச் சொல்லி ஒருமித்த கருத்துடன் அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்வோம். வரும் 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இன்னமும் 18 மாதங்களே உள்ளன. எனவே, வரும் டிசம்பர் மாதத்துக்குள் அதிமுக ஒன்றிணைந்தாக வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

> இலங்கையை வீழ்த்தி வங்கதேச அணி த்ரில் வெற்றி: நடப்பு டி20 உலகக் கோப்பையின் பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி வங்கதேச அணி த்ரில் வெற்றி பெற்றது. 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச வீரர்களுக்கு இலங்கை பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். என்றாலும், வங்கதேசம் 19 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

அதேபோல், ‘குரூப் - சி’ ஆட்டத்தில் நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் 84 ரன்களில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான்.

x