டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு முதல் தோல்வி குறித்து இபிஎஸ் கருத்து வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> பதவியேற்புக்கு தயாராகும் டெல்லி: இந்திய பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவுக்காக டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ட்ரோன்கள் பறக்கத் தடை, எல்லைகளில் கண்காணிப்பு, போக்குவரத்து மாற்றம் எனப் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5 கம்பெனி நாடாளுமன்ற பாதுகாப்புப் படையினர், என்எஸ்ஜி கமாண்டோக்கள், ட்ரோன்கள், ஸ்னைப்பர்கள் என பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகள் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு டெல்லியில் ஜி20 மாநாடு நடந்தபோது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு அம்சங்கள் இப்போதும் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

> நீட் தேர்வினை ரத்து செய்ய மாராஷ்டிரா அரசு முயற்சி: கடந்த மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வில் மகாராஷ்டிரா மாநில மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அம்மாநில அரசு, அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளது.

> ஊடக நிறுவனர் ராமோஜி ராவ் காலமானார்: ‘ஈ நாடு’ ஊடகம், ராமோஜி ஃபிலிம் சிட்டி நிறுவனருமான ராமோஜி ராவ் சனிக்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 87. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை 4.50 மணியளவில் உயிரிழந்தார். இதனை ஈ நாடு ஊடக குழுமம் உறுதி செய்துள்ளது.

> ராமோஜி ராவ் மறைவுக்கு மோடி, ஸ்டாலின் இரங்கல்: பிரதமர் மோடி தனது இரங்கல் குறிப்பில், "ராமோஜி ராவின் இழப்பு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்திய ஊடகங்களில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வை கொண்டவராக அவர் இருந்தார். இதழியல் மற்றும் திரைப்படத் துறைகளில் அவருடைய உயரிய பங்களிப்பு அழியாத முத்திரையை பதித்துள்ளன. அவரது குறிப்பிடத்தக்க முயற்சிகளால், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் பல புதுமைகள் மற்றும் சிறப்புத் தரங்களை அவர் உருவாக்கினார் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ராமோஜி குழும நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவ் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். ஊடகம், இதழியல், திரைப்படத் துறைகளுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்புகள் வழியே என்றென்றும் நிலைத்திருக்கும் மரபை அவர் விட்டுச்சென்றுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

> நேரு - மோடி ஒப்பீட்டை கேலி செய்த காங்கிரஸ்: மக்களவைத் தேர்தலில் ஆட்சி அமைக்க பெற்றிருக்கும் இந்த ஆணை பிரதமர் மோடிக்கு தார்மீக, அரசியல் மற்றும் தனிப்பட்ட முறையில் தோல்வியே என்று விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, அவரது பரிதாபகரமான தேர்தல் செயல்திறனை நியாயப்படுத்த தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று விமர்சித்துள்ளது.

ஜவஹர்லால் நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமாக வெற்றி பெற்றவர் மோடிதான் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஒரு கட்சியை 240 இடங்களுக்கு கொண்டு செல்வதும், மூன்றில் ஒரு பங்கு பெற்ற பிரதமராவதும் எப்படி ஆணை பெற்றதாகும். நேரு மூன்று முறையும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றிருந்தார் என்று காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

> காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: 2024 மக்களவைத்தேர்தலுக்கு பின்னர் முதல்முறையாக டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தினை அக்கட்சின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அவர் தனது தொடக்க உரையின் போது, "நம்மீது நம்பிக்கை வைத்து சர்வாதிகார சக்திகளுக்கும், அரசியல்சாசன விரோத சக்திகளுக்கும் மக்கள் வலுவான பதிலடி கொடுத்துள்ளனர். பாஜகவின் 10 ஆண்டு கால பிரித்தாளும், வெறுப்பு மற்றும் துருவப்படுத்தும் அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

> “2019 தேர்தலை விட ஒரு சதவீதம் கூடுதல் வாக்கு” - இபிஎஸ்: “சசிகலா, ஓ.பி.எஸ் பிரிந்து சென்றதால் தான் அதிமுகவுக்கு ஒரு சதவீதம் வாக்கு கூடுதலாக கிடைத்துள்ளது. மேலும், 2019 தேர்தலை விட, அதிமுகவுக்கு ஒரு சதவீதம் வாக்கு கூடுதலாக கிடைத்துள்ளது. இது அதிமுகவுக்கு வெற்றியே” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வி குறித்து முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி இவ்வாறு தெரிவித்தார்.

> திமுக கூட்டணி வெற்றி; தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம்: “திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்... அப்படியில்லை, தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி தலைக்கு மேல் தூக்கி வணங்கியிருக்கிறார். ஜனநாயகம் என்பது அதிகாரம் செலுத்துவதில்லை, அடங்கி அரவணைத்துச் செல்வது என்பதை பத்தாண்டுகளுக்குப் பிறகு பாஜக உணரத் தொடங்கியிருக்கும்; தாங்கள் எதைச் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கும்.

இனி பாஜக அசைக்கவே முடியாத சக்தி என்று ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு மக்களை நம்ப வைக்க நடந்த முயற்சிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தில் மக்களே அதிகாரம்மிக்கவர்கள்; தனிமனிதர்களோ அல்லது ஒரு இயக்கமோ மக்களைவிட அதிகாரம் கொண்டது இல்லை என்பதை இந்தத் தலைமுறைக்கு 2024 தேர்தல் உணர்த்தியிருக்கிறது” என்று திமுக கூட்டணி வெற்றி குறித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

> இலங்கையை வீழ்த்தி வங்கதேச அணி த்ரில் வெற்றி: டி20 உலகக் கோப்பையில் பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி வங்கதேச அணி த்ரில் வெற்றிபெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச வீரர்களுக்கு இலங்கை பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். என்றாலும் வங்கதேசம் 19 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இதனிடையே நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - சி’ ஆட்டத்தில் நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் 84 ரன்களில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். அந்த அணியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது.

> என்டிஏ வெற்றி குறித்து பாகிஸ்தான் கருத்து: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடன் கூட்டுறவுடன் இருக்க விரும்புவதாகவும், பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண விரும்புவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சம் தெறிவித்துள்ளது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக நாளை பதவி ஏற்க உள்ளநிலையில் பாகிஸ்தான் இவ்வாறு தெரிவித்துள்ளது.

நரேந்திர மோடியின் தேர்தல் வெற்றிக்கு பாகிஸ்தான் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஸாரா பலோச், "தங்களை எந்தத் தலைமை ஆள வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை இந்திய மக்ளுக்கு உண்டு. இந்தியாவின் தேர்தல் செயல்பாடு குறித்து கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எதுவும் இல்லை" என்றார்.