தேமுதிக கிளப்பிய சர்ச்சை முதல் ‘அதிமுக + பாஜக’ சலசலப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> “விஜய பிரபாகரன் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்” - பிரேமலதா: “விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார். இதுதான் உண்மை. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

மேலும், “வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணும் மையத்தில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும், ஊடகங்களில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்தது. வாக்கு எண்ணும் மையத்தில் பல முறைகேடுகள் நடந்ததாக அங்கிருக்கும் அதிகாரிகளே சொல்கிறார்கள். தேர்தல் முடிவு அறிவிக்கும் முன்னதாகவே, முதல்வர் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றது என்கிறார். எதனை வைத்து முன்கூட்டியே வென்றுவிட்டோம் எனக் கூறினார் என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.

ஏனென்றால், விருதுநகர் தொகுதியில் நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் தான் மாணிக்கம் தாக்கூர் அங்கு வெற்றிச் சான்றிதழை வாங்கினார். அப்படி இருக்கும்போது முதல்வர் ஸ்டாலின் முன்கூட்டியே வெற்றிபெற்றதாக அறிவித்தது எப்படி? விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

> நீதிமன்றத்தை நாடுவோம்: தேமுதிக தகவல்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை சந்தித்த, தேமுதிக வழக்கறிஞர் ஜனார்த்தனன் புகார் மனு ஒன்றை அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “விருதுநகர் தொகுதியில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. உடனடியாக விசாரிக்க வேண்டும், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளோம். மனு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை. வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அன்று 9 மணிக்கு எங்கள் வேட்பாளர் மற்றும் தலைமை முகவர் உள்ளிட்டோர், எண்ணிக்கை முடிந்துவிட்டது மாணிக்கம் தாக்கூர் வெற்றி பெற்றுவிட்டதால் வெளியேற வேண்டும் என்று வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

ஆனால், நள்ளிரவு ஒரு மணிக்குத்தான், அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் தந்துள்ளனர். ஆளுங்கட்சி அமைச்சர்கள் முகாமிட்டிருந்தனர். இதுதவிர மாலை 3 முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரியும் யாரிடமோ தொலைபேசியில் உரையாடிக் கொண்டே இருந்தார். இது தொடர்பான வீடியோ பதிவுகள் உள்ளன. தேர்தல் ஆணையம் விசாரித்தால் உண்மை தெரியவரும். மாவட்ட தேர்தல் அதிகாரியிடமே புகார் அளித்தும் பயனில்லை. காவல் துறை உயர் அதிகரிகள் குவிக்கப்பட்டு, எங்களை வெளியேற்றிவிட்டனர். மறு வாக்கு எண்ணிக்கை என்ற எங்களின் கோரிக்கை நிறைவேறாவிட்டால், நீதிமன்றத்தை அணுகுவோம்” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, “தேர்தல் நடைமுறை முடிந்த பின் தேர்தல் மனுக்கள் குறித்து உயர் நீதிமன்றம் தான் உத்தரவிட வேண்டும். விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தொடர்பாக தேமுதிகவிடமிருந்து புகார் வந்தால் தேர்தல் ஆணைய உத்தரவின் படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

> முடிவுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த மார்ச் 16-ம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் வியாழக்கிழமையுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது.

> தமிழகத்தில் அரசு வேலைக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பு: தமிழகத்தில் அரசு வேலைக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில், ஆண் பதிவுதாரர்களின் எண்ணிக்கையை காட்டிலும், பெண் பதிவுதாரர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

> டெல்லிக்கு உபரி நீரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: தலைநகர் டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் உபரி நீரை விடுவிக்குமாறு இமாச்சல் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வாறு வரும் உபரி நீரை வாஜிராபாத் அணை வழியாக வெளியேற்றுவதற்கான வசதிகளை மேற்கொள்ள ஹரியாணா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

> தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 8 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

> தேர்தலில் வென்ற 543 எம்.பி.க்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள்: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதவாது 543 மக்களவை உறுப்பினர்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதன்மூலம், அதிக அளவிலான செல்வந்தர்கள் மக்களவைக்குள் தங்களது என்ட்ரியை கொடுத்துள்ளனர். ‘தி அசோசியேஷன் ஃபார் டெமாக்ரட்டிக் ரிஃபார்மஸ்’ மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளது. கடந்த 2019 தேர்தலில் இந்த எண்ணிக்கை 88 சதவீதமாக இருந்தது. 2014 தேர்தலில் 82 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

> அக்னிபாத் திட்டத்தை கைவிட நிதிஷ், சிராக் நிபந்தனை: மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளன. மேலும், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளையும் இரு கட்சிகளும் முன்வைத்துள்ளன.

இதனிடையே, டெல்லியில் ஜூன் 9-ம் தேதி மாலை நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 8-ல் பிரதமர் மோடி பதவியேற்பார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இவ்விழா ஒருநாள் தள்ளிவைக்கப்படுவதாக தெரிகிறது.

> ஓபிஎஸ், சசிகலா Vs அதிமுக: “தென்சென்னை, வேலூர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். 24 இடங்களில் 2-ம் இடத்தை பிடித்தது. 10 இடங்களில் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது” என புள்ளிவிவரங்களை அடுக்கியுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுப்போம்” என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

இதனிடையே, “ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. நாம் ஒற்றுமையுடன் இருந்தால் யாராலும் நம்மை வீழ்த்த முடியாது” என்று சசிகலா கூறியுள்ளார்.

இதற்கு அதிமுக கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. “அதிமுக தலைமை அலுவலகத்தில் குண்டர்களை வைத்து அடித்து, உடைத்து ஆவணங்களை திருடியவர் ஓபிஎஸ். சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர். இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து தற்போது போட்டியிட்டவர். இவருக்கு அதிமுக பற்றி பேச எந்த தார்மிக உரிமையும் இல்லை. தமிழக, பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார். அவரை நல்லவர் எனக் கூறி கை கோத்துள்ளார். அதிமுகவின் உண்மையான விசுவாசி யாரும் அவர் பக்கத்தில் கூட அமர மாட்டார்கள்.

அதேபோல், ஜெயலலிதாவுக்கு பணிவிடை செய்ய வந்தவர் சசிகலா. அவருடன், 36 ஆண்டுகள் பின்னால் நின்று அதிகாரத்தை சுவைத்தவர். கட்டுகோப்பாக உள்ள அதிமுகவில் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் ஓபிஎஸ், சசிகலா ஆகியோரின் விஷமப் பிரசாரங்கள் எடுபடாது” என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பதிலடி தந்துள்ளார்.

> அதிமுக - பாஜக அரசியல் சலசப்பு: “அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் அதிகமாக பேசியதாக அண்ணாமலை கூறியுள்ளார். ஆனால், அதிகமாக பேசியதே அவர்தான். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி வந்ததற்கு அண்ணாமலைதான் காரணம். அதே கூட்டணி நீடித்திருந்தால், இன்று 30-35 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆனால், எல்லாவற்றையும் செய்துவிட்டு இன்று மீண்டும் வந்து அதிமுகவை அண்ணாமலை விமர்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

அதேபோல், “அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி குறித்தோ, எஸ்.பி.வேலுமணி குறித்தோ பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை. அண்ணாமலை முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பற்றிக் கொள்ளட்டும்” என்று அதிமுக ஐ.டி.விங் விமர்சித்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் உட்கட்சி பிரச்சினை இருக்கிறது என்று அண்ணாமலை பேசியதற்கு பதிலடியாக இந்த விமர்சனம் சொல்லப்பட்டுள்ளது.

இதனிடையே, “அதிமுக - பாஜக கூட்டணி இருந்திருந்தால், திமுகவுக்கு ஓர் இடத்தில்கூட இல்லாமல் போயிருக்கும் என்பதை என்னால் தெளிவாக கூற முடியும்” என்று தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், “பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 35 இடங்களில் வெற்றி பெற்றிருப்போம் என அதிமுக தரப்பில் கூறப்படுவதைப் பார்த்தால் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே எதோ பிரச்சினை தொடங்கியுள்ளதாக நான் பார்க்கிறேன். 2019-ல் ஆளுங்கட்சியாக இருந்தபோது கூட அதிமுகவால் மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் தான் வெற்றிபெற முடிந்தது. 2026-ல் பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும். அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்பது நான் பேசுவதில் இருந்தே தெரிந்திருக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

x