இந்தூரில் 2 லட்சம் வாக்குடன் நோட்டா இரண்டாம் இடம்


போபால்: மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நேரத்தில் பாஜகவில் இணைந்த இந்தூர்தொகுதியில் 2,02,212 வாக்குகளுடன் நோட்டா இரண்டாமிடம் பெற்றுள்ளது.

ம.பி.யின் இந்தூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்சய கன்ட்டி பாம் என்பவர் நிறுத்தப்பட்டார். இந்நிலையில் அக்சய கன்ட்டி கடந்த ஏப்ரல் 29-ம் தேதி, பாஜகவை சேர்ந்தஅமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, எம்எல்ஏ ரமேஷ் மென்டோலா ஆகியோருடன் இந்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். பிறகு அவர் பாஜகவில் இணைந்தார்.

இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாற்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதால் இந்தூரில் அக்கட்சி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து இந்தூரில் பிற வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க விரும்பாத காங்கிரஸ், தனது ஆதரவாளர்களை நோட்டாவுக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டது.

இத்தொகுதியில் தற்போதைய எம்.பி. சங்கர் லால்வானிக்கு (62) பாஜக மீண்டும் வாய்ப்பு அளித்திருந்தது. இந்நிலையில் இந்தூரில் 11,60,627 வாக்குகள் பெற்று சங்கர் லால்வானி வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து இந்தூரில் 2,02,212 வாக்குகளுடன் நோட்டா இரண்டாமிடம் பெற்றுள்ளது.இதற்கு முன் பிஹாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் நோட்டாவுக்கு 51,660 வாக்குகள் பதிவானது. இது, அத்தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 5 சதவீதம் ஆகும்.

x