ஸ்மிருதி முதல் கங்கனா வரை: நட்சத்திர வேட்பாளர்களில் வென்றவர்களும் வீழ்ந்தவர்களும்!


அமேதியில் ஸ்மிருதி இரானி தோல்வி: இந்திரா காந்தி ஆட்சிக் காலத்திலிருந்து கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிப்பணியில் ஈடுபட்டு வந்த கிஷோரி லால் சர்மா, இம்முறை அமேதி தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டி யிட்டார்.

இதே தொகுதியில், கடந்த 2019 தேர்தலில் ராகுல் காந்தியை தோற்கடித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் களமிறங்கினார். இதனால் 2024 மக்களவை தேர்தலில் அமேதியில் மேலும் பரபரப்பு அதிகரித்தது. கிஷோரி லால் சர்மாவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அமேதியில் தீவிர பிரச்சாரம் செய்தார். இதன் பலனாக, 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் கிஷோரி லால் சர்மா வெற்றி பெற்றுள்ளார். அவர், 5,39,228 வாக்குகள் பெற்றார். ஸ்மிருதி இரானி 3,72,032 வாக்குகளையே பெற முடிந்தது.

இமாச்சலில் கங்கனா ரனாவத் வெற்றி: இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் போட்டியிட்டார். இவரை எதிர்த்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கட்சியில் இணைந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை பாஜக வேட்பாளராக நிறுத்தியது. அவர் 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் விக்ரமாதித்ய சிங்கை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

அசன்சோலில் சத்ருகன் சின்ஹா வெற்றி: மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகர் சத்ருகன் சின்ஹா 59,564 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு 6,05,645 வாக்குகள் கிடைத்தன. இந்த தொகுதியில் இவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுரேந்திரஜித் சிங் அலுவாலியா 5,46,081 வாக்குகள் பெற்றார்.

கடந்த 2014, 2019 தேர்தலின்போது அசன்சோல் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாடகர் பபுல் சுப்ரியோ வெற்றி பெற்றார். திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை மூன் மூன் சென் தோல்வி அடைந்தார். எனினும், 2021-ல் பாஜகவிலிருந்து விலகிய சுப்ரியோ, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, 2022-ல் நடந்த அசன்சோல் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சத்ருகன் சின்ஹா வெற்றி பெற்றார். இப்போது 2-வது முறையாக போட்டியிட்ட அவர், வெற்றி பெற்றுள்ளார்.

அனந்த்நாக் தொகுதியில் மெகபூபா தோல்வி: காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி மக்களவை தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் மியான் அல்தப் அகமது 5 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இங்கு மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி 2 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறேன். பிடிபி தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் கடின உழைப்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி. எனக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி. வெற்றியும், தோல்வியும் சகஜம். இதனால் நமது கொள்கை மாறாது’’ என்றார்.

உமரை தோற்கடித்த சுயேச்சை வேட்பாளர்: காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உட்பட பல கட்சிகளைச் சேர்ந்த 22 பேர் போட்டியிட்டனர். இவர்களில் அப்துல் ரஷீத் ஷேக் என்பவரும் ஒருவர். இவர் முன்பு அவாமி இதிகாத் கட்சியை நடத்தி இருமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளிப்பதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இவரை தேசிய புலனாய்வு முகமை கடந்த 2019-ம் ஆண்டில் கைது செய்தது. இவர் தற்போது டெல்லி திஹார் சிறையில் உள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானபோது, அப்துல் ரஷீத் ஷேக் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். உமர் அப்துல்லா 2 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

காலிஸ்தான் பிரிவினைவாதி வெற்றி: பஞ்சாப் மாநிலம் கடூர் சாஹிப் மக்களவை தொகுதியில், காலிஸ்தான் பிரிவினைவாதியும் வாரிஸ் பஞ்சாப் தே அமைப்பின் தலைவருமான அம்ரித்பால் சிங் சுயேச்சையாக போட்டியிட்டார். இவர் 4,04,430 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட குல்பிர் சிங் ஜிரா 2,07,310 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அம்ரித்பால் சிங், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதுபோல, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்றவர்களில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜீத் சிங் கல்சா, பரித்கோட் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இவர் 70,053 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட கரம்ஜித் சிங் அன்மோல் 2-ம் இடம் பிடித்தார்.

x