புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி: அதிமுகவை பின்னுக்குத் தள்ளிய நாம் தமிழர்!


புதுச்சேரி: புதுச்சேரி மக்களைவத் தொகுதியில் பாஜகவை விட 1.36 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 4-ம் இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. 3-ம் இடத்துக்கு நாம் தமிழர் கட்சி முன்னேறியது.

புதுவை மக்களவைத் தொகுதி தேர்தலில் பாஜக சார்பில் அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் உட்பட 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நேற்று இரவு நிறைவடைந்தது. மொத்தம் பதிவான 8.07 லட்சம் வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் 4.26 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் 2.89 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். வாக்கு வித்தியாசம் 1.36 லட்சம்.

3-வதாக நாம் தமிழர் கட்சியின் மேனகா 39,603 வாக்குகளும், அதிமுக தமிழ் வேந்தன் 25,165 வாக்குகள் பெற்றுள்ளனர். நோட்டா 9679.

அதிமுகவை பின்தள்ளி முன்னேறிய நாம் தமிழர் கட்சி: புதுச்சேரி எம்பி தொகுதியில் நான்காம் இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. 3ம் இடத்துக்கு நாம் தமிழர் கட்சி முன்னேறியது. புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருந்தது. அப்போது ஒரு இடத்தில் கூட அதிமுக வெல்லவில்லை.

பின்னர் இக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி அரசை விமர்சித்து வந்தது. தற்போதைய மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டது. அதனால் 26 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் மும்முனை போட்டி நிலவியது.

ஏனெனில் 2014ல் புதுவையில் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுக ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 657 வாக்குகளை பெற்று 3ம் இடத்தை பிடித்திருந்தது. அதனால் காங்கிரஸ்- பாஜகவுக்கு இணையாக அதிமுக களத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. 2வது இடத்தில் பாஜக உள்ள நிலையில் 3-வது இடத்தில் தொடக்கம் முதலே நாம் தமிழர் கட்சி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் நான்காம் இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டது. அத்துடன் பாஜக தவிர்த்து 24 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.