ஆந்திராவில் மாற்றம்: உறுதியாகிறது தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி! 


அமராவதி: ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில்,மாநிலத்தில் ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்படுத்தியுள்ளது. அங்கு தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா கூட்டணி மாநிலத்தின் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 154 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தக் கூட்டணியின் தெலுங்கு தேசம் 130 தொகுதிகளிலும், ஜனசேனா 20 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. அதேநேரம், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை சந்தித்து வருகிறது.

குப்பம் தொகுதியில் 9-வது முறையாக போட்டியிட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு 9,088 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதேபோன்று புலிவேந்துலா தொகுதியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 34,964 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். பிட்டாபுரம் தொகுதியில் நடிகர் பவன் கல்யாண் 40,693 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.

நகரி தொகுதியில் போட்டியிட்ட ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா இம்முறை பின்னடைவைச் சந்தித்து வருகிறார். ரோஜா 10,376 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அவரை எதிர்த்து போட்டியிடும் பானு பிரகாஷ் 18,388 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதேபோல், ஜெகன் மோகன் கட்சியினருக்கு பல தொகுதிகளில் பின்னடைவே ஏற்பட்டுள்ளது.

மக்களவை தொகுதிகள்: ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதிகளில் 16 தொகுதிகளில் தெலுங்கு தேசமும், 4 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும், 3 தொகுதிகளில் பாஜகவும், 2 தொகுதிகளில் ஜனசேனாவும் முன்னிலை வகிக்கின்றன. தெலங்கானாவில் மொத்தம் உள்ள 17 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் - 8 பாஜக - 8 என முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

x