“இது டிரெய்லர் தான்...” - வாரணாசி பின்னடைவு குறித்து ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்


ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவைச் சந்தித்தது குறித்து, “தற்போதைய பிரதமர் முன்னாள் பிரதமர் ஆகப் போகிறார் என்பதை இந்தப் போக்குகள் காட்டுகின்றன” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி பின்னடைவை சந்தித்திருந்தார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.

இந்தத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டார். அவரை எதிர்த்து இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் களமிறக்கப்பட்டார். கடந்த முறையும் இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர் எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் வாரணாசியில் மோடி முன்னிலை பெற்றார். ஆனால் அடுத்த சுற்றில் பிரதமர் மோடி திடீர் பின்னடைவைச் சந்தித்தார். அதாவது, காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்திருந்தார். தற்போதைய நிலவரப்படி பிரதமர் மோடி மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.

பிரதமரின் பின்னடைவைக் கடுமையாக சாடியுள்ள, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “தற்போதைய பிரதமர் முன்னாள் பிரதமர் ஆகப் போகிறார் என்பதையே இந்தப் போக்குகள் காட்டுகின்றன. இது பிரதமருக்கு அரசியல் தோல்வி மட்டுமல்ல, தார்மீக தோல்வியாகவும் தெரிகிறது. பிரதமர் தனது சொந்த தொகுதியில் இருந்து பின்தங்குவது இதற்கு முன் நடந்ததில்லை. வாரணாசியின் போக்குகள் வெறும் டிரெய்லர் மட்டுமே...” எனத் தெரிவித்துள்ளார்.