இண்டியா கூட்டணியின் சனாதன விரோத மனோபாவம்: பாஜக விமர்சனம்


பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸுக்கும் இண்டியா கூட்டணிக்கும் என்ன ஆனது? பிரதமர் ஏதாவது சொன்னால் அது அவர்களுக்கு பிரச்சினையாகிறது. அவர் எதுவும் பேசாமல் தியானம் செய்யச் சென்றால் அதுவும் அவர்களுக்கு பிரச்சினையாகிறது. இது எதிர்க்கட்சிகளின் விரக்தி மற்றும் சனாதன எதிர்ப்பு மனோபாவத்தை காட்டுகிறது.

எதிர்க்கட்சியினர் ராமர் கோயிலை எதிர்த்தார்கள். அது பயனற்றது என்றார்கள். இந்து தீவிரவாதம் போன்ற சொற்றொடர்களை பயன்படுத்தினார்கள். சனாதனம் ஒரு நோய் என்றார்கள். ஓர் இந்து அமைதியான முறையில் தியானம் செய்வதில் இவர்களுக்கு என்னப் பிரச்சினை?

பிரதமர் பிரச்சாரம் செய்யவில்லை. அரசியல் கருத்துகளையும் கூறவில்லை. தியானம், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்றால் அது எந்தப் பிரிவின் கீழ் எதிரானது?

பிரதமரின் தியானத்தை ஊடகங்கள் படம்பிடிக்கக் கூடாது என்கின்றனர் எதிர்க்கட்சியினர். இன்றய சமூக ஊடக காலத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது. டேட்டா செலவு 90 சதவீதம் குறைந்துள்ளது. யாராவது வீடியோ எடுத்தால், அவர்களைத் தடுக்க முடியுமா?

ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டில் தேர்தல் நடைபெற்றபோது, அவர் அதன் அருகில் உள்ள கர்நாடகாவில் பிரச்சாரம் செய்தார். அரசியல் பேசினார். அமைதிக்கான காலம் வன்முறையாக மாறியது, எதிர்க்கட்சிகள் அமைதியாக இருந்தன.

பிரதமர் மோடிக்கு எதிரான எதிர்க்கட்சியினரின் நிலைப்பாடு அவர்கள் சனாதனத்திற்கு எதிரானவர்கள் என்பதையே காட்டுகிறது. இவ்வாறு ஷேசாத் பூனாவாலா கூறினார்.

x