ஜூன் 2-ல் மீண்டும் சிறை செல்கிறேன்: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தகவல்


புதுடெல்லி: ஜூன் 2-ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்கிறேன் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு கடந்த 2021 முதல் 2022 வரையிலான காலத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது.

இந்த ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. அமலாக்கத் துறை கைது நடவடிக்கையை எதிர்த்து விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு, மக்களவைத் தேர்தலையொட்டி கேஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜூன் 2-ம் தேதி டெல்லி திஹார் சிறையில் அவர் சரணடைய வேண்டும் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டனர்.

இடைக்கால ஜாமீன் காலத்தை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனு சில நாட்களுக்கு முன்பு நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:

நான் 50 நாட்கள் சிறையில் இருந்தேன். அப்போது நீரிழிவு நோய்க்கான மருந்து, மாத்திரைகளை வழங்க மறுத்தனர். சிறையில் இருந்த நாட்களில் 6 கிலோ எடை குறைந்தேன். தற்போது பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனது சிறுநீரில் கீட்டோன் அளவு அதிகமாக இருக்கிறது.

இந்த சூழலில் ஜூன் 2-ம் தேதி மீண்டும் சிறைக்குச் செல்கிறேன். அன்று மாலை 3 மணிக்கு வீட்டில் இருந்து புறப்படுவேன். நான் இல்லாவிட்டாலும் அனைத்து திட்டங்களும் சிறப்பாக நடைபெறும். ஒரு மகனாக டெல்லி குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளேன்.

இப்போது உங்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். எனது பெற்றோருக்கு வயதாகிவிட்டது. அவர்களை டெல்லி மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன். நாம் ஒன்றிணைந்து சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போரிட வேண்டும். கடவுளின் ஆசி இருந்தால் மீண்டும் திரும்ப வருவேன்.

இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

x