பிரஜ்வல் ரேவண்ணாவிடம் தீவிர விசாரணை முதல் ‘குற்றவாளி ட்ரம்ப்’ வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாள் காவலில் விசாரிக்க எஸ்டிஐ-க்கு அனுமதி: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது. மேலும், அவருடைய வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன‌. தலைமறைவான ரேவண்ணா, ஜெர்மனி தப்பிச் சென்றார்.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா நள்ளிரவில் ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். பெங்களூரு விமான நிலையத்தில் அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கிட்டத்தட்ட 12 மணி நேரம் அவரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன்பின் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். தொடர்ந்து அவர் மக்கள் பிரதிநிதிகள் வழக்குகளை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாள் காவலில் விசாரிக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், அவரிடம் சிறப்பு விசாரணைக் குழு தீவிர விசாரணை செய்து வருகிறது.

> தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 10-க்கு தள்ளிவைப்பு: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தால், வரும் ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

> உடல் உறுப்பு தானம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை: உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை உதவித் தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அளவிலான குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

> தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக அவசர கடிதம்: தபால் வாக்கு, மின்னணு இயந்திர வாக்கு எண்ணிக்கை தொடர்பான நடைமுறைகளை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார்.

> “மத்திய அரசின் நிதியில் திமுகவின் கல்வித் துறை சாதனை”: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘திராவிட மாடல் அரசின் மூன்றே ஆண்டுகளில், தமிழகத்தின் கல்வித் துறை நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சியை கண்டுள்ளது என்றும், நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் தொடக்கம் தான் இது’ என்று கூறியிருந்தார். இதனை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “கல்வித் துறையில் திமுகவின் சாதனைகள் அனைத்தும் மத்திய அரசின் நிதியில் நிறைவேற்றப்பட்டவை” என்று கூறியுள்ளார்.

> முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து: டெல்லியில் சனிக்கிழமை நடைபெற உள்ள இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

> “சிறைக்கு திரும்புகிறேன்...” - கேஜ்ரிவால் உருக்கம்: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் சனிக்கிழமையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மீண்டும் சிறைக்கு திரும்புவது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், “தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள 21 நாட்கள் எனக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன்படி நான் மீண்டும் திஹார் சிறைக்கு திரும்புகிறேன். இந்த முறை என்னை எத்தனை நாள் சிறையில் வைக்க உள்ளார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், மனதளவில் நான் தெளிவாக உள்ளேன்.

நான் எனது வீட்டில் இருந்து மதியம் மூன்று மணி அளவில் சிறைக்கு சென்று, சரணடைய உள்ளேன். எனது குடும்பத்துக்காக இன்று நான் உங்களிடம் ஒன்றே ஒன்று மட்டும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். எனது பெற்றோர் மிகவும் வயதானவர்கள். என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் குறித்து சிறையில் எண்ணி எண்ணி நான் வருந்துகிறேன். எனக்கு பதிலாக எனது குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள்” என அந்த வீடியோவில் அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

> குமரியில் 2-வது நாளாக மோடி தியானம்: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை 2-வது நாள் துறவி கோலத்தில் தியானத்தில் ஈடுபட்டார். அவர் காவி உடையுடன் ருத்ராட்ச மாலையை ஏந்தியவாறு சூரிய வழிபாடு, கங்கா வழிபாட்டில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாத வகையில் வெள்ளிக்கிழமை விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்ல சுற்றுலாப் பயணிகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். ஆதார் கார்டு இருக்கும் சுற்றுலாப் பயணிகள் மட்டும் படகு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆதார் எண்களை பாதுகாப்பு அதிகாரிகள் சரிபார்த்த பின்னரே சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தனர்.

இதனிடையே, “அரசியலையும், மதத்தையும் ஒருபோதும் இணைக்கக் கூடாது. அது இரண்டுமே தனித்து தான் இருக்க வேண்டும். ஒரு மதத்தை சேர்ந்தவர் உங்கள் பக்கம் இருக்கலாம். மற்றொரு மதத்தை சேர்ந்தவர் உங்களுக்கு எதிராக இருக்கலாம். அதனால், மதம் சார்ந்த உணர்வுகளையும் தேர்தலையும் இணைப்பது என்பது தவறானது. பிரதமர் மோடி கன்னியாகுமரி சென்று நாடகம் போடுகிறார். அவ்வளவு காவலர்கள் பணியில் உள்ளதால் நாட்டின் பணம் தான் வீணாகிறது. இதனால் நாட்டுக்கு தான் தீங்கு. உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலேயே தியானம் செய்யலாம்” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

> வட இந்தியாவில் வெப்ப அலைக்கு இதுவரை 54 பேர் பலி: நாட்டின் தெற்குப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்குப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. தலைநகர் டெல்லியில் வரலாற்றில் முதல்முறையாக 126.14 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்நிலையில், வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வீசி வரும் வெப்ப அலைகளால் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

> முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி: நீதிமன்றம்: அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த 2016 தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் குற்றவாளி என 12 ஜூரிகள் அடங்கிய குழு அறிவித்துள்ளது. சுமார் இரண்டு நாட்கள் நடந்த தீவிர ஆலோசனைக்கு பிறகு நியூயார்க் ஜூரிகள் இதனை அறிவித்தனர். இந்த வழக்கில் நீதிபதி ஜுவான் மெர்ச்சன், வரும் ஜூலை 11-ம் தேதி தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளார்.

குற்ற வழக்கில் அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ விசாரிக்கப்படுவது மற்றும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவது அமெரிக்க அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், “நாட்டின் முன்னாள் அதிபர் இதுபோன்ற விவகாரத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். அதிலிருந்தே தெரிகிறது இந்த தீர்ப்பில் அரசியல் உந்துதல் உள்ளது என்று. இதே நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது அமெரிக்க சட்ட அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு பெருத்த சேதமாக அமைந்துள்ளது” என ட்ரம்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் குரல் கொடுத்துள்ளார்.