அரசமைப்பு சாசனத்தின் கழுத்தை நெரித்தது காஙகிரஸ் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு


பஞ்சாபில் 13 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பஞ்சாபின் ஹோஷியார்பூரில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க பாஜக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த லட்சிய கனவு திட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் இணைந்துள்ளனர். புதிய லட்சியங்கள், புதிய கனவுகள், புதிய நம்பிக்கையுடன் பாரதம் அதிவேகமாக முன்னேறி செல்கிறது.

பஞ்சாப் மக்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இப்போது வெளிநாடுகளில் பாரதத்தின் புகழ் உயர்ந்திருக்கிறது. இதை பஞ்சாபியர்கள் நன்றாக உணர்ந்து உள்ளனர். பாஜக ஆட்சியில் ரேஷனில் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.

இப்போது பசியோடு யாரும் தூங்க செல்வதில்லை. ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. ஏழை பெண்களுக்கு இலவசமாக சமையல் காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது.

காங்கிரஸும் இண்டியா கூட்டணி கட்சிகளும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை இண்டியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. சிஏஏ சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன. தற்போதைய மக்களவைத் தேர்தலில் அரசமைப்பு சாசனம் குறித்து இண்டியா கூட்டணி தலைவர்கள் வதந்திகளை பரப்பிவருகின்றனர்.

அவசர நிலை காலத்தில் அரசமைப்பு சாசனத்தின் கழுத்தை காங்கிரஸ் நெரித்தது. இதை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியருக்கு எதிரான கலவரத்தின்போது அரசமைப்பு சாசனத்தை காங்கிரஸ் துளியும் மதிக்கவில்லை. இதை சீக்கியர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். ஊழலின் தாய் காங்கிரஸ். கடந்த 60 ஆண்டுகளில் அந்த கட்சி ஊழலில் இரு பிஎச்.டி. பட்டங்களை பெற்றிருக்கிறது. இப்போது காங்கிரஸோடு ஆம் ஆத்மி என்ற மற்றொரு ஊழல் கட்சியும் இணைந்திருக்கிறது.

பஞ்சாபில் தொழில் துறை, விவசாயத்தை ஆம் ஆத்மி அரசு அழித்து வருகிறது. அந்த கட்சி தலைவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்களின் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தப்படும். அதற்கு பஞ்சாபின் அனைத்து தொகுதிகளிலும் பாஜகவை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.