வாராணசியில் பிரியங்கா களமிறங்கி இருந்தால் மோடிக்கு சவாலாக இருந்திருக்கும் - காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சு


பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாராணசியில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. பிரதமர் மோடியை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் அஜய் ராய் நிறுத்தப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அதார் ஜமால் லாரி களமிறக்கப்பட்டுள்ளார்.

இது தவிர்த்து 3 சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் வாராணசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி இரு முறையும் மிகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்நிலையில் தொடர்ந்து 3-வது முறையாக அவர் வாராணசியில் போட்டியிடுகிறார்.

முந்தைய இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் மோடியை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் அஜய் ராய் நிறுத்தப்பட்டார். இந்நிலையில் மூன்றாவது முறையாகவும் அவர் களமிறக்கப்படுகிறார். இ

ந்நிலையில், ‘‘பெயர் அளவிலேயே மோடியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பிரியங்கா காந்தி போன்ற வலுவான வேட்பாளர் களம் இறக்கி இருந்தால் மோடிக்கு சவாலாக இருந்திருக்கும்’’ என்று உள்ளூர் காங்கிரஸார் பேசிக்கொள்வதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வாராணசியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், “மோடி அரசு மீது நிலவும் அதிருப்தியை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள வலுவான வேட்பாளர்களை களமிறக்கி இருக்க வேண்டும். ஆனால், அவை, வலுவற்ற வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன.

மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி களமிறங்கி இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். மோடிக்கு பிரியங்கா காந்தி சவாலாக இருந்திருப்பார்” என்று தெரிவித்தார்.