எனது உத்தரவாதத்தின் சமீபத்திய உதாரணம் சிஏஏ அமல்: பிரதமர் மோடி பெருமிதம்


புதுடெல்லி: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் அடைக்கலம் புகுந்த சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க, சிஏஏ சட்டம் கடந்த மார்ச் 11-ம் தேதி அமல்படுத்தப்பட்டது.

சிஏஏ சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்த 300 பேருக்கு, இந்திய குடியுரிமை சான்றிதழை மத்திய அரசு நேற்று வழங்கியது. இது குறித்து உத்தர பிரதேசத்தின் அசம்கர் நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

மோடி உத்தரவாதத்தின் சமீபத்திய உதாரணம் சிஏஏ சட்டம். இந்த சட்டத்தின்கீழ் இந்தியா வந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் சட்டம் தொடங்கிவிட்டது. இவர்கள் எல்லாம் நீண்ட காலமாக இந்தியாவில் வாழ்கிறார்கள். மத அடிப்படையில் நாடு பிரிந்தபோது இவர்கள் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. மகாத்மா காந்தி பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், அவர் கூறியதை பற்றி நினைக்கவில்லை. அண்டை நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையினர் பற்றி காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. ஏனென்றால் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கி அல்ல.

காங்கிரஸ் கட்சியினரின் முகத்திரையை கிழித்தது நான்தான். அவர்கள் நடிப்பவர்கள், மதவாதிகள். 60ஆண்டுகளாக நாட்டை மதவாத தீயில் எரியவிட்டவர்கள். உங்களால் சிஏஏ சட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்

x