யாருக்கும் விதிவிலக்கு அளிக்கவில்லை: கேஜ்ரிவால் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விளக்கம்


புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான முடிவாக இல்லை. கேஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் சலுகை வழங்குவதாக பலரும் கூறி வருகின்றனர்” என்றார்.

ஜாமீனில் வெளிவந்துள்ள அர்விந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, ‘‘ஜூன் 2-ம்தேதி நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும். மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ல் வெளியாகிறது. நீங்கள் இண்டியா கூட்டணியை வெற்றிபெற செய்தால் ஜூன் 5-ம் தேதி விடுதலையாவேன்’’ என்றார்.

இந்நிலையில் அமலாக்கத் துறை சார்பில் நேற்றுஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ள அர்விந்த் கேஜ்ரிவால் எப்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்க முடியும்? இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்என்று வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் தீபங்கர் தத்தா அமர்வு,அது கேஜ்ரிவாலின் அனுமானம். அவர் எப்போதுசரணடைய வேண்டும் என்பது நாங்கள் அளித்தஉத்தரவில் தெளிவாக உள்ளது. நாங்கள் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கவில்லை என்று தெரிவித்தது