“பரமாத்மா அனுப்பியிருந்தால் ஏழைகளுக்கு மோடி பிரதமர் உதவியிருக்க வேண்டும்” - ராகுல் காந்தி


பரமாத்மா அனுப்பியிருந்தால் ஏழைகள், விவசாயிகளுக்கு பிரதமர் மோடி உதவியிருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறினார். அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “நான் மனிதப் பிறவி அல்ல.

என்னை பூமிக்கு அனுப்பியதே பரமாத்மாதான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்துவதற்காக என்னை கடவுள் பூமிக்கு அனுப்பி உள்ளார். நான் பெற்றுள்ள ஆற்றல் சாதாரண மனிதர்கள் பெற்றிருப்பதைப் போல கிடையாது. கடவுள் ஒருவரால் மட்டுமே இதுபோன்ற ஆற்றலைத் தர முடியும்'' என்று பேசியிருந்தார்.

பிரதமர் மோடியின் பேச்சை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிஹாரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: பரமாத்மா கதையை பிரதமர் மோடி ஏன் பேசுகிறார் தெரியுமா? மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் பிரதமர் மோடியிடம் அதானி, அம்பானி குறித்து அமலாக்கத்துறை விசாரிக்கும்.

அப்போது எனக்கு எதுவும் தெரியாது. பரமாத்மா என்ன சொன்னாரோ அதை செய்தேன் என்று சொல்லப் போகிறார் மோடி. அதற்காகவே இப்போது பரமாத்மா கதையை எடுத்து பேசி வருகிறார் மோடி.

பரமாத்மா இவரை பூமிக்கு அனுப்பியிருந்தால் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் அவர் உதவி செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. இவர் என்ன மாதிரியான கடவுள்? இந்த நாட்டை பிளவுபடுத்துகிற இதுபோன்ற பிரிவினைவாத பேச்சுகளை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும்.

மிக நீண்டநேரம் பேசுவதை நிறுத்திவிட்டு பிஹார் மற்றும் இந்த நாட்டு மக்களுக்கு 10 ஆண்டுகளில் உருவாக்கிக் கொடுத்த வேலைவாய்ப்புகள் குறித்து பட்டியலிட்டு பேச வேண்டும்.
ஜூன் 4-ம் தேதிக்குப் பின்னர் மோடி நாட்டின் பிரதமராகவே மாட்டார் என எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

பிஹார், உத்தர பிரதேசத்தில் இண்டியா கூட்டணிக்கான ஆதரவு அலை வீசுகிறது. மத்தியில் இண்டியா கூட்டணியே ஆட்சி அமைக்கும். இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் ஏழைப் பெண்கள் முன்னேற்றத்துக்காக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் தருவோம்.

நாட்டின் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்போம். நாட்டின் ராணுவ வீரர்களை ஒப்பந்த தொழிலாளர்களாக நடத்தும் அக்னி வீரர் திட்டத்தை ரத்து செய்வோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகள் காக்கும்.இவ்வாறு ராகுல் பேசினார்.