கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம் @ தூத்துக்குடி


பள்ளிகள் திறப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 627 பள்ளிகள் இன்று காலை (திங்கள்கிழமை) திறக்கப்பட்டன. இதையடுத்து மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்குச் சென்றனர்.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. அதன்படி அனைத்து பள்ளிகளும் ஜூன் 10-ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளும் இன்று தொடங்கின. இதற்காக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் அனைத்தும் சுத்தம் செய்து வைக்கப்பட்டிருந்தன. அதே போன்று அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

தூத்துக்குடி மாவட்டத்தில் 122 அரசு நடுநிலைப் பள்ளிகள், 177 அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள், 32 அரசு உயர்நிலைப்பள்ளி, 45 அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி, 56 அரசு மேல்நிலைப்பள்ளி, 89 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 91 மெட்ரிக் பள்ளிகள், 15 சிபிஎஸ்இ பள்ளிகள் என மொத்தம் 627 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

இன்று காலை முதல் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு சென்றனர். அவர்களை ஆசிரியர்கள் மகிழ்வோடு வரவேற்றனர். பல பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், பூக்கள் வழங்கியும், பன்னீர் தெளித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு அரசின் இலவச பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன.

பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், உடன்குடி உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் உள்ள சாலைகள் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டன.