பள்ளிகளில் ஆதார் பதிவு சிறப்பு முகாம் தொடக்கம் @ காஞ்சிபுரம்


ஆதார் பதிவு முகாமை பார்வையிடுகிறார் மாவட்ட ஆட்சியர் கலைல்செல்வி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளிலேயே ஆதார் புதுப்பித்தல், திருத்துதல், பதிவு செய்தல் ஆகியவை தொடர்பான சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்தச் சேவை இலவசமாக செய்யப்படுகிறது.

இந்த முகாம் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் சி.எஸ்.என்.மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி வைத்தார். இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றிய 15 பேர் இந்தத் திட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களுக்கும் தலா 3 பேர் வீதம் அனுப்பபட்டுள்ளனர்.

இவர்கள் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று இந்தச் சேவைகளை முடிக்க உள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்தச் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளிலும் நேரடியாகச் சென்று இந்தச் சேவை வழங்க உள்ளனர். ஆனால் தனியார் பள்ளிகளுக்கு சிறு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

பள்ளி மாணவர்கள் ஆதார் மையங்களுக்குச் சென்று அலைவதை தடுக்கவும், அவர்கள் பள்ளி செல்லவது பாதிக்கப்படாமல் இருக்கவும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் மாணவர்கள் பலர் ஆர்வமுடன் வந்து தங்கள் ஆதார் அட்டைகளை புதுப்பித்துக் கொண்டனர்.