சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்: கோவையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவிகள் முகங்களில் விழிப்புணர்வு வாசகங்களை வரைந்து பங்கேற்றனர். | படம் : ஜெ. மனோகரன்

கோவை: சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்த ஆண்டு கருப்பொருள் 'புகையிலை தயாரிப்பு நிறுவனங்கள் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாப்போம்' என்பதாகும்.

இதையொட்டி கோவையில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், கங்கா, டெக் சிட்டி செவிலியர் பயிற்சி கல்லூரிகள், கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சார்ந்த, 250 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேரணியை தொடங்கி வைத்தார்.

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. | படம் :ஜெ. மனோகரன்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) அலுவலகம் வரை சென்று பேரணி நிறைவடைந்தது. புகையிலை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவ - மாணவியர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழியை மாணவ - மாணவியர் எடுத்துக்கொண்டனர்.

x