அரியலூரில் மின் கசிவால் மளிகைக் கடையில் தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்


அரியலூர்: அரியலூர் சின்னக்கடைத் தெருவில் மளிகைக் கடை ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.

அரியலூர் சின்னக்கடைத் தெருவில் சுகுமார் (45) என்பவர், கடந்த 12 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல நேற்று (மே 30) இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை கடைக்குள் இருந்து புகை வந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர், சுகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுகுமார் கடையை திறந்து பார்த்தபோது, மின்கசிவு காரணமாக தீப்பற்றி பொருட்கள் எரிவது தெரியவந்தது.

இதையடுத்து சுகுமார் அரியலூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீய்ச்சி தீயை அனைத்தனர். ஆனாலும், அதற்குள் கடையிலிருந்த, அரிசி, பருப்பு உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின. இந்த விபத்து குறித்து அரியலூர் நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.