20,332 அரசு பள்ளிகளில் அதிவேக இணைய வசதி: தமிழக அரசு பெருமிதம்


சென்னை: மாணவர்களின் கற்றலை எளிமையாக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் 20,332 அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 17,221 பள்ளிகளில் ஜூன் 2-வது வாரத்துக்குள் இப்பணி முடிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்க ரூ.519.73 கோடியில் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Labs), 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classrooms) அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 46.13 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைவார்கள்.

மேலும், 6,023 அரசு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் உள்ளஉயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் அதிவேக இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில், பாடங்கள் அனைத்தும்காணொலியாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல், மொழி ஆய்வக செயல்பாடு, மனஎழுச்சி நலன் மேம்பாட்டு பயிற்சி, மாணவர்களுக்கான மதிப்பீடுகள் போன்றவை உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், திறன்மிகு வகுப்பறைகள் மூலம் வழங்கப்பட உள்ளன.

பள்ளிகளில் இத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்ள, ஏற்கெனவே இருந்த அதிவேக இணைய வேகத்தை மேலும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 46 லட்சம்மாணவர்கள் கடினமான பாடங்களை எளிமையாக காணொலி மூலம் தெளிவாக கற்கவும், உயர்கல்வி வழிகாட்டுதல்களை எளிதாக பெறவும், ஆங்கிலத்தில் புலமை பெற மொழி ஆய்வகங்களை பயன்படுத்தவும், கணினிசார் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் வழிவகை ஏற்படும்.

மத்திய பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் உடன் இணைந்து இணைய வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது.தமிழகத்தில் உள்ள 6,223 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 5,913 பள்ளிகளிலும், 6,992 நடுநிலைப் பள்ளிகளில் 3,799பள்ளிகளிலும், 24,338 தொடக்கப்பள்ளிகளில் 10,620 பள்ளிகளிலும்இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளிகளுக்கு அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இப்பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 17,221 பள்ளிகளுக்கு ஜூன் 2-வது வாரத்துக்குள் முடியும் வகையில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதன்மூலம், 2024-25 கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் புதுமையான அனுபவங்கள், உத்வேகமான மனநிலையோடு கல்வி கற்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.