புதுச்சேரி - சென்டாக்கில் நீட் அல்லாத படிப்புக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாள்


பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி: புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். அதில் சென்டாக் இணையதளம் மூலம் 16,319 பேர் பதிவு செய்த நிலையில், அதில் 13,149 பேர் மட்டுமே விண்ணப்பத்தை இன்று வரை சமர்ப்பித்துள்ளனர். சான்றிதழ் பிரச்சினைகளால் 3,170 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்காமல் உள்ளனர்.

புதுச்சேரியில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் நீட் அல்லாத பொறியியல், சட்டம், வேளாண்மை மற்றும் கால்நடை மருத்துவம், கலை மற்றும் அறிவியல், செவிலியர் உள்ளிட்ட படிப்புகளுக்கு சென்டாக் மூலம் விண்ணப்பிப்பது வழக்கமாகும். விண்ணப்பித்தவர்கள் கலந்தாய்வு மூலம் விரும்பிய கல்லூரி மற்றும் பாடங்களுக்கு தேர்வு செய்து உயர்கல்விக்கு அனுமதிக்கப்படுவர்.

புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலைப் படிப்புகளுக்கான விண்ணப்பம் சென்டாக் மூலம் கடந்த 8-ம் தேதி முதல் பெறப்பட்டது. கால அவகாசம் கடந்த 22-ம் தேதி வரை அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், பலதரப்பிலும் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று மே 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அதன்படி இன்று வரையில் சென்டாக் இணையதளத்தில் 16,319 பேர் உயர் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அதில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 13,149 பேர் சென்டாக்கில் சமர்ப்பித்துள்ளனர்.

வருவாய் சான்றிதழ் பெறமுடியாமை உள்ளிட்ட காரணங்களால் 3,170 பேர் விண்ணப்பங்களை நேரடியாக சமர்ப்பிக்காமல் உள்ளனர். வட்டாட்சியர் அலுவலகங்களில் சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற அலைக்கழிப்படுவதும் இதற்கு முக்கியக்காரணம் என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இதனிடையே, விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் என்பதால் எஞ்சியவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நாளை மாலைக்குள் சமர்ப்பிக்கும் படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

x