கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து நீதிமன்றம் வந்த வரிச்சியூர் செல்வம்!


மதுரை: கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்துகொண்டு மதுரை நீதிமன்றத்துக்கு வந்த வரிச்சியூர் செல்வத்தை பொதுமக்கள், வழக்கறிஞர்கள் வியப்பும் ஆச்சரியமும் மேலிடப் பார்த்தனர்.

மதுரை மாவட்டம், வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம் (58). இவர் மீது கொலை உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையிலுள்ளன. வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அவர் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். முன்னதாக செல்வம் நீதிமன்ற வளாகத்துக்கு சொகுசுக் காரில் வந்து இறங்கினார். பொதுவாக அவர் எங்கு சென்றாலும் கழுத்து, கைகளில் தங்க நகைகள் அணிந்து செல்வது வழக்கமாக இருக்கும்.

இதன்படி, இன்றும் அவர் வித்தியாசமான நகைகளை அணிந்து இருந்தார். வழக்கமாக அவர் அணிந்திருக்கும் தங்க நகைகளுக்குப் பதிலாக புதியதாக கழுத்தில் சுமார் முக்கால் கிலோ எடை கொண்ட புதிய முறுக்கு செயின், கை விரல்களில் சிறுத்தை உருவம் பொறித்த மோதிரம் அணிந்திருந்தார். அத்துடன் தங்க சிங்கமும், தங்க கொம்புடன் கூடிய காளை உருவம் கொண்ட செயினும் கழுத்தில் அணிந்து இருந்தார்.

கிலோ கணக்கில் உடல் முழுவதும் தங்க நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்த வரிச்சியூர் செல்வத்தை நீதிமன்ற வளாகத்தில் இருந்த பொதுமக்களும் வழக்கறிஞர்களும் வியப்புடனும், ஆச்சரியமாகவும் பார்த்தனர்.