திருச்சி தில்லை நகரில் இனிப்புக் கடை பூட்டை உடைத்து ரூ.43,000 பணம் திருட்டு


திருச்சி: திருச்சி தில்லை நகரில் இன்று அதிகாலையில் கொள்ளையர்கள் இனிப்புக் கடையின் பூட்டை உடைத்துக் பணத்தை திருட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தில்லை நகர் 9-வது கிராஸ் பகுதியில் பெட்ரோல் பங்க் எதிரில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புக் கடை உள்ளது. வழக்கம் போல் நேற்று இரவு 10 மணிக்கு வியாபாரத்தை முடித்து கடையை பூட்டிவிட்டு கடையின் மேலாளர் பிரேமா வீட்டுக்குச் சென்றுள்ளார். இன்று காலை 8 மணிக்கு மீண்டும் கடையை திறக்க வந்த அவர், கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.43 ஆயிரம் பணத்தை காணவில்லை.

கொள்ளையர்கள் கடையின் பூட்டை ஆக்சா பிளேட் மூலம் அறுத்து உள்ளே புகுந்து, கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கடையின் உரிமையாளர் சாரநாத், தில்லை நகர் போலீஸில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

24 மணி நேரமும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் தில்லை நகர் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிப்பு கடையில் கொள்ளைக்கு முன்னதாக கொள்ளையர்கள் அருகில் இருந்த மொபைல் கடையிலும் திருட முயன்றுள்ளனர்.