சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயிலில் மிரட்டல் வந்ததால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் விமான நிறுவன அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் ஒரு இ-மெயில் வந்தது. சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் வெடிக்கும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

இத்தகவல் உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி, அவர்களையும், அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்கின்றனர்.

இதற்கிடையே, குண்டு மிரட்டல் தொடர்பாக விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணையில், அது புரளி என்று தெரியவந்தது. இ-மெயிலில் மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.